ஆம் ஆத்மி திட்டங்கள் தொடர்பான புகார் மீது... விசாரணை! டில்லி போலீசாருக்கு கவர்னர் உத்தரவு
ஆம் ஆத்மி திட்டங்கள் தொடர்பான புகார் மீது... விசாரணை! டில்லி போலீசாருக்கு கவர்னர் உத்தரவு
ADDED : டிச 29, 2024 03:09 AM

புதுடில்லி: டில்லியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், பெண்களுக்கு உதவித்தொகை, மு தியோருக்கு இலவச மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சியின் அறிவிப்பால் ஏற்பட்டுள்ள சர்ச்சைகள் குறித்து விசாரிக்கும்படி, டில்லி தலைமைச் செயலர் மற்றும் போலீஸ் கமிஷனருக்கு துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா உத்தரவிட்டுள்ளார்.
டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையில் ஆம் ஆத்மி அரசு அமைந்துள்ளது. இங்கு சட்டசபைக்கு வரும் பிப்ரவரியில் தேர்தல் நடக்க உள்ளது.
தகுதியுள்ள பெண்களுக்கு, மாதந்தோறும், 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்குவதாக ஆம் ஆத்மி ஏற்கனவே அறிவித்திருந்தது.
மீண்டும் ஆட்சி
இந்நிலையில், சமீபத்தில் இதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனாலும் செயல்பாட்டுக்கு வரவில்லை.
இதற்கிடையே, மீண்டும் ஆட்சி அமைத்தால், இந்த தொகையை 2,100 ரூபாயாக உயர்த்தி தருவோம் என, ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் அறிவித்தார்.
இதைத்தவிர, டில்லியில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்கும் சஞ்சீவினி என்ற திட்டத்தையும் அவர் அறிவித்தார்.
இந்த அறிவிப்புகளைத் தொடர்ந்து, இதற்கான பயனாளிகள் விண்ணப்பிப்பதற்கான முகாம்களை, கெஜ்ரிவால் மற்றும் ஆதிஷி சமீபத்தில் நடத்தினர்.
மிக பிரமாண்டமான முறையில் இதற்கான பிரசாரத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் ஈடுபட்டுஉள்ளனர்.
'இதுபோன்ற திட்டங்கள் செயல்பாட்டில் இல்லை. அதனால், தகவல் தந்து ஏமாற வேண்டாம்' என, டில்லி அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை, சுகாதாரத் துறை ஆகியவை பொதுமக்களை எச்சரித்து, சமீபத்தில் அறிக்கைகளை வெளியிட்டன.
பத்திரிகைகளில் விளம்பரமும் கொடுக்கப்பட்டன.
இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், காங்கிரஸ் நிர்வாகி சந்தீப் தீட்சித், துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
உதவித்தொகை திட்டம்
அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:
இல்லாத ஒரு திட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சியினர் விண்ணப்பங்களை பெற்று வருகின்றனர். பொதுமக்களிடம் இருந்து தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.
இந்த தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படும் வாய்ப்பும் உள்ளது. ஆம் ஆத்மி கட்சியினர் என்ற போர்வையில், மோசடிக்காரர்கள் நுழைந்து, இதுபோன்று தகவல்களை சேகரிக்கவும் வாய்ப்புஉள்ளது.
டில்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வீடுகளை, பஞ்சாபில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள உளவுப் பிரிவினர் கண்காணிக்கின்றனர்.
மேலும், வாக்காளர்களுக்கு பணம் தருவதற்காக, ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாபில் இருந்து பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.
இந்த புகார்கள் குறித்து விசாரித்து, உரிய அறிக்கைகளை தாக்கல் செய்யும்படி, டில்லி தலைமைச் செயலர் மற்றும் போலீஸ் கமிஷனருக்கு துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா உத்தரவிட்டுள்ளார்.
அதே நேரத்தில், மகளிர் உதவித்தொகை திட்டத்துக்காக இதுவரை, 22 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக, ஆம் ஆத்மி கூறியுள்ளது.