கன்னட மொழி கட்டாய சட்டம்: திருப்பி அனுப்பிய கவர்னர்
கன்னட மொழி கட்டாய சட்டம்: திருப்பி அனுப்பிய கவர்னர்
UPDATED : பிப் 01, 2024 10:52 AM
ADDED : பிப் 01, 2024 12:56 AM

பெங்களூரு: 'பெயர் பலகைகளில் 60 சதவீதம் கன்னட மொழி இருக்க வேண்டும்' என்ற கர்நாடக அரசின் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் தர மறுத்த கவர்னர் தாவர்சந்த் கெலாட், சட்டசபையில் மசோதா தாக்கல் செய்து கொண்டு வரும்படி திருப்பி அனுப்பினார்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, அனைத்து நிறுவனங்கள் மற்றும் கடைகளில், 60 சதவீதம் அளவுக்கு பெயர் பலகைகளில் கன்னட மொழி இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெங்களூரு மாநகராட்சியிடம் கன்னட அமைப்பினர் வலியுறுத்தினர். இதை தொடர்ந்து மாநகராட்சியும், 'ஜனவரிக்குள் பெயர் பலகைகளில், 60 சதவீதம் கன்னடம் இடம் பெற்றிருக்க வேண்டும்; இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரிக்கை விடுத்திருந்தது.
ஜன., 5ம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில், வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகைகளில், 60 சதவீதம் கன்னட மொழி பயன்படுத்துவதை கட்டாயமாக்கும் கன்னட மொழி மேம்பாட்டு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக அரசாணை வெளியிட, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டுக்கும் அவசர சட்டம் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், இதை ஏற்க மறுத்த கவர்னர், இது தொடர்பாக சட்டசபையில் மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றி அனுப்பும்படி கூறி, அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பி விட்டார்.
இது தொடர்பாக துணை முதல்வர் சிவகுமார் கூறுகையில், ''பெயர் பலகைகளில் கன்னட மொழியை அதிகரிக்க, அரசு சட்டம் கொண்டு வர கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பியது.''அதில் கையெழுத்திட்டு இருக்கலாம். ஆனால், அதை அவர் திருப்பி அனுப்பிவிட்டு, சட்டசபையில் நிறைவேற்றும்படி வலியுறுத்தியுள்ளார்,'' என்றார்.