துடைத்த போது 'டுமீல்' நடிகர் கோவிந்தா காலில் தோட்டா
துடைத்த போது 'டுமீல்' நடிகர் கோவிந்தா காலில் தோட்டா
ADDED : அக் 02, 2024 01:24 AM

மும்பை, பிரபல பாலிவுட் நடிகரும், சிவசேனா கட்சி பிரமுகருமான கோவிந்தாவின் கைத்துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் அவரது காலில் குண்டு பாய்ந்தது.
பாலிவுட் நடிகர் கோவிந்தா, 60. இதுவரை, 165க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், 2004ல் நடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
எனினும், 2008ல் அரசியலுக்கு முழுக்குப் போட்டார்.
சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலுக்கு முன், மஹாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்தார்.
மேற்கு வங்கத்தில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக, நேற்று காலை 6:00 மணிக்கு விமானம் வாயிலாக கோல்கட்டா செல்ல திட்டமிட்டிருந்தார்.
இதற்காக, மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலை 4:45 மணிக்கு புறப்பட தயாரானார்.
அப்போது, உரிமம் பெற்ற தன் கைத்துப்பாக்கியை துடைத்து பீரோவில் வைக்க முயன்றபோது, கைத்தவறி கீழே விழுந்தது. எதிர்பாராதவிதமாக துப்பாக்கி வெடித்ததில் கோவிந்தாவின் காலில் குண்டு பாய்ந்தது.
சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பணியாட்கள், உள்ளே சென்று பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் கோவிந்தா துடித்துக்கொண்டிருந்தார்.
உடனே அருகில் உள்ள மருத்துவமனையில்அனுமதித்தனர்.
காலில் பாய்ந்த தோட்டாவை டாக்டர்கள் அகற்றினர். மருத்துவமனையில் ஓரிரு நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற அறிவுறுத்தினர்.
'இந்த சம்பவம் குறித்து புகார் ஏதும் வராததால், வழக்குப்பதிவு செய்யவில்லை' என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், துப்பாக்கியை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

