ADDED : மார் 08, 2024 12:55 PM
திருவனந்தபுரம், நாட்டிலேயே முதன் முறையாக கேரளாவில், ஓ.டி.டி., எனப்படும் திரைப்படங்களை இணையம் வாயிலாக ஒளிபரப்பும் தளத்தை அரசே நேற்று துவங்கியது.
ஓ.டி.டி., வாயிலாக திரைப்படம், தொடர்களை ஒளிபரப்பு செய்யும் நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன.
தனியார் நிறுவனங்களின் ஓ.டி.டி., தளங்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ள நிலையில், கேரள மாநில அரசு, மலையாள படங்களுக்கு என்று அரசு சார்பில் 'சி - ஸ்பேஸ்' எனும் ஓ.டி.டி., தளத்தை உருவாக்கியுள்ளது.
இந்த சி -- ஸ்பேஸ் செயலியை, கேரள அரசின் கலாசாரத் துறையின் கீழ் செயல்படும் மாநில திரைத்துறை வளர்ச்சி கழகம் நிர்வகிக்க உள்ளது.
அரசின் ஓ.டி.டி.,க்கு திரைப்படங்கள் மற்றும் தொடர்களை தேர்வு செய்ய, இந்நிறுவனம் பிரபல இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள் உடைய 60 பேர் குழுவை அமைத்துள்ளது.
கலை, கலாசாரம் மற்றும் பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த படங்களை மட்டுமே தேர்வு செய்ய உள்ளது. பயனர் கட்டணமாக ஒரு படத்துக்கு, 75 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதில், பாதி தொகை தயாரிப்பாளருக்கு செல்லும்.
இந்த தளத்தை துவக்கி வைத்து, முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயன் பேசுகையில், ''இந்த திட்டம் கலை, கலாசார மதிப்புள்ள படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு முன்னோடி முயற்சி. தியேட்டரில் வெளியான பின்னரே இதில் திரைப்படங்கள் இடம் பெறும். எனவே, திரைத்துறைக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது,'' என்றார்.

