கன்னட கொடி ஏற்றுவது கட்டாயம் வர்த்தக நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு
கன்னட கொடி ஏற்றுவது கட்டாயம் வர்த்தக நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு
ADDED : அக் 12, 2024 02:31 AM

பெங்களூரு :“கர்நாடக மாநிலம் உதயமான தினமான, நவ., 1ம் தேதியன்று, அனைத்து கல்வி மற்றும் வர்த்தக நிலையங்கள், தொழிற்சாலைகளில் கன்னட கொடி கட்டாயம் பறக்கவிடப்பட வேண்டும்,” என, மாநில துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
மைசூரு மாநிலம் என்ற பெயர், கர்நாடகா என பெயர் மாற்றம் பெற்று, 50 ஆண்டுகள் நிறைவடைய உள்ளன. கர்நாடக மாநிலம் உதயமான தினம் நவ., 1ல் கொண்டாடப்பட உள்ளது.
இதுகுறித்து, மாநில துணை முதல்வர் சிவகுமார் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
கர்நாடகா உதயமான நவ.,1ம் தேதி, மாநிலத்தில் உள்ள அனைத்து அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்கள், கன்னட கொடியை கட்டாயம் ஏற்ற வேண்டும்.
இந்த தினத்தை கொண்டாடும் வகையில் அரசு ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சி ஒரு இடத்தில் நடத்தப்பட்டாலும், கன்னட மொழியின் மீது மாணவர்களுக்கு பற்று ஏற்படும் நோக்கில் அனைத்து தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனங்கள் கொண்டாட்டங்களை கட்டாயம் நடத்த வேண்டும்.
பெங்களூரில் வசிக்கும் 50 சதவீத மக்கள், பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
அவர்கள் கன்னட மொழியை பயில முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கன்னட மொழி தெரியாமல் கர்நாடகாவில் வாழ முடியாது என்பதை, அனைவரும் உணர வேண்டும்.
சுதந்திர தினம், குடியரசு தினத்தைப் போல, நவ., 1ல் கன்னட கொடியை ஏற்றி கலாசார நிகழ்ச்சிகளை கல்வி நிறுவனங்கள் நடத்த வேண்டும்.
வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் கலாசார நிகழ்ச்சிகள் நடத்தத் தேவையில்லை. ஆனால், கன்னட கொடி கட்டாயம் ஏற்றப்பட வேண்டும்; மீறினால் அபராதம் விதிக்கப்படும்.
இதை அனைவரும் தன்னார்வத்துடன் செய்வர் என நம்புகிறேன். இதை காரணமாக வைத்து, வர்த்தக மற்றும் கல்வி நிறுவனங்களை மிரட்டும் கன்னட ஆதரவு அமைப்புகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.