'கிரேட்டர் பெங்களூரு' மசோதா: நாளை கருத்து கேட்பு கூட்டம்
'கிரேட்டர் பெங்களூரு' மசோதா: நாளை கருத்து கேட்பு கூட்டம்
ADDED : பிப் 05, 2025 09:44 PM
பெங்களூரு; 'கிரேட்டர் பெங்களூரு' நிர்வாக மசோதா தொடர்பாக, அரசு அமைத்த சட்டசபை இணை கமிட்டி, பொது மக்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி, கருத்துகள் கேட்டறிய முடிவு செய்துள்ளது. முதல் கூட்டம் நாளை நடக்கிறது.
இது தொடர்பாக, பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 2014 ஜூலையில் நடந்த, சட்டசபை கூட்டத்தொடரில், 'கிரேட்டர் பெங்களூரு மசோதா' தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தன. எனவே மாநில அரசு, சிவாஜி நகர் காங்., -- எம்.எல்.ஏ., ரிஸ்வான் அர்ஷத் தலைமையில், சட்டசபை இணை கமிட்டி அமைத்து, ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டது.
கமிட்டியும் இதுவரை 16 ஆலோசனை கூட்டங்களை நடத்தியது. ஒரு மாநகராட்சியில், எத்தனை வார்டுகள் இருக்க வேண்டும், வார்டில் எவ்வளவு மக்கள் இருக்க வேண்டும் என்பது உட்பட பல அம்சங்கள் மசோதாவில் உள்ளன. இது குறித்து, பொது மக்களின் கருத்துகளை கேட்டறிய, சட்டசபை இணை கமிட்டி முடிவு செய்துள்ளது.
பொது மக்களின் கருத்தை கேட்டறிய, ஆறு ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படும். முதல் கூட்டம் எலஹங்கா, தாசரஹள்ளி மண்டல பிரதிநிதிகளுடன், நாளை நடக்கிறது. இதில் கமிட்டி தலைவர் ரிஸ்வான் அர்ஷத் உட்பட 12 உறுப்பினர்கள் பங்கேற்பர். பிப்ரவரி 10 மற்றும் 11ம் தேதிகளில், மற்ற மண்டலங்களில் ஆலோசனை நடத்தப்படும்.
மார்ச்சில் நடக்கவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில், கிரேட்டர் பெங்களூரு நிர்வாக மசோதா வரைவு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் தெரிவிக்கும் கருத்துகளை ஆய்வு செய்து, அவசியம் ஏற்பட்டால் மாற்றம் கொண்டு வரப்படும். பிப்ரவரி 21க்குள் அரசுக்கு அறிக்கை அளிக்க, கமிட்டி முடிவு செய்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.