கர்நாடகாவில் 'பைக் டாக்சி' சேவைக்கு பச்சைக்கொடி! தடையை நீக்கி அனுமதி அளித்தது உயர் நீதிமன்றம்
கர்நாடகாவில் 'பைக் டாக்சி' சேவைக்கு பச்சைக்கொடி! தடையை நீக்கி அனுமதி அளித்தது உயர் நீதிமன்றம்
ADDED : ஜன 24, 2026 01:12 AM

பெங்களூரு: கர்நாடகாவில், 'பைக் டாக்சி' சேவைக்கு கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 'பைக் டாக்சி' சேவையை மீண்டும் துவங்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
கார், ஆட்டோ போல, இருசக்கர வாகனங்களில் பயணியரை ஏற்றிச் செல்லும் பைக் டாக்சி சேவை, நாடு முழுதும் பல்வேறு மாநிலங்களிலும் அமலில் உள்ளன. 'ஓலா, ஊபர், ராபிடோ' உள்ளிட்ட இந்த சேவையை அளிக்கின்றன.
கர்நாடகாவின் பெங்களூரு போன்ற போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில், பொது மக்களுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மணிக்கணக்கில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி காத்திருக்க தேவையில்லை என்பது மட்டுமின்றி, மிக குறைந்த கட்டணத்தில் இந்த சேவை கிடைப்பதால், நடுத்தர வர்க்கத்தினர் இதை அதி கம் பயன்படுத்துகின்றனர்.
இருப்பினும், இந்த பைக் டாக்சி சேவைகள் முறைப்படுத்தப்படாததால், அதில் பாதுகாப்பு சிக்கல்கள் இருப்பதை சுட்டிக்காட்டிய கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி அமர்வு, கடந்த ஆண்டு இந்த சேவைக்கு தடை விதித்தது. கர்நாடகாவில், பைக் டாக்சிகள் இயக்கம் குறித்து மாநில அரசு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்தது. இதனால், பைக் டாக்சிகளின் நன்மை, தீமை குறித்து ஆராய்வதற்கு மாநில அரசு உயர் அதிகார குழுவை நியமித்தது.
'பைக் டாக்சிகள் பாதுகாப்பற்றவை' என, அந்த உயர் அதிகார குழு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இதை எதிர்த்து, 'ஓலா, ராபிடோ, ஊபர்' நிறுவனங்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தன. இந்த மனு தலைமை நீதிபதி விபுபக்ரு, நீதிபதி சி.எம்.ஜோஷி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
கர்நாடகாவில் பைக் டாக்சி சேவைக்கு தடை விதிக்கப்பட்ட தனி நீதிபதி யின் தீர்ப்பு ரத்து செய் யப்படுகிறது. மாநிலத் தில் பைக் டாக்சி சேவை மீண்டும் அனுமதிக்கப்படுகிறது. தற்போதைய மோட்டார் வாகன சட்டத்தின்படி, பைக் டாக்சி சேவைக்கு மாநில அரசு வழிவகை செய்ய வேண்டும். பைக் டாக்சி சேவை தொடர்பாக, மேலும் சில நிபந்தனைகளை அரசு விதிக்கலாம்.
பைக்குகள் போக்குவரத்து வாகனங்களாக பதிவு செய்யப்பட்டு, ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட வேண்டும். சட்டப்பூர்வ அனுமதிகளுக்கு உட்பட்டு, இருசக்கர வாகனங்களை போக்குவரத்து வாகனங்களாக பயன்படுத்தலாம். இதை பைக் டாக்சி சேவை வழங்கும் நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
பைக் உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை டாக்சியாக பயன்படுத்த விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப் பங்கள் தொடர்பான அனைத்து அம்சங்களையும் அரசு ஆராயலாம். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு பைக் டாக்சி ஓட்டுநர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தீர்ப்பு தங்களின் வாழ்க்கைக்கு பெரும் உதவியாக இருக்கும் என, அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆலோசனைக்கு பின் முடிவு
கர்நாடக உயர் நீதிமன்ற தனி நீதிபதி, பைக் டாக்சி சேவைக்கு தடை விதித்தார். தற்போது, இரண்டு நீதிபதிகள் அமர்வு அதற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது. நீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்ததும் போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து, அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும்.
-ராமலிங்க ரெட்டி கர்நாடக போக்குவரத்து துறை அமைச்சர், காங்.,

