மனித சிறுநீரில் பசுமை உரம் ஐ.ஐ.டி., ஆய்வாளர்கள் சாதனை
மனித சிறுநீரில் பசுமை உரம் ஐ.ஐ.டி., ஆய்வாளர்கள் சாதனை
ADDED : பிப் 16, 2024 07:24 AM
பாலக்காடு: மனித சிறுநீரை பயன்படுத்தி பசுமை உரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றலை உருவாக்கி, கேரளாவின் பாலக்காடு ஐ.ஐ.டி., ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துஉள்ளனர்.
கேரள மாநிலம் பாலக்காடில் ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் உள்ளது. இதில் ஆராய்ச்சியாளர்களாக சங்கீதா, ஸ்ரீஜித், ரினு அன்னா கோஷி ஆகியோர் உள்ளனர்.
இவர்கள் மனித சிறுநீரை பயன்படுத்தி பசுமை உரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றலை உருவாக்கி, புதுமையான கண்டுபிடிப்பை நிகழ்த்திஉள்ளனர்.
உலகளவில் எரிசக்தி தேவை அதிகரித்து வரும் நிலையில் இந்த புதுமையான கண்டுபிடிப்பு, எரிசக்தி தேவையை பூர்த்தி செய்யும் என நம்பப்படுகிறது.
இந்த கண்டுபிடிப்பில் நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் நிறைந்த பசுமை உரம் தயாரிக்கப்படுவதுடன், 500 மில்லிவாட் மின்சக்தியும் உற்பத்தி செய்யப்படுகிறது.
மேலும் ஒவ்வொரு 48 மணிநேரத்திலும் 10 கிராம் உரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் தயாரிக்கப்படும் மின்சாரத்தை பயன்படுத்தி மொபைல் போன்கள் சார்ஜ் செய்ய முடியும் என்பதுடன், எல்.இ.டி., பல்புகளையும் ஒளியூட்ட முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.