குடிநீர் கட்டணங்களுக்கு பசுமை வரி; கர்நாடகா அரசின் புதிய திட்டம்
குடிநீர் கட்டணங்களுக்கு பசுமை வரி; கர்நாடகா அரசின் புதிய திட்டம்
ADDED : நவ 14, 2024 11:52 AM

பெங்களூரூ: குடிநீர் கட்டணங்களுக்கு பசுமை வரி விதிப்பதற்கான முன்மொழிவுகளை வழங்குமாறு வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் காந்த்ரே தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் துங்கா, பத்ரா, காவேரி, கபினி, ஹேமாவதி, கிருஷ்ணா, மலபிரபா, ஹட்டபிரபா உள்ளிட்ட ஆறுகள் பாய்ந்தோடுகின்றன. இந்த ஆறுகள், அம்மாநிலத்தின் பல்வேறு நகர் மற்றும் கிராமப்புற பகுதிகளின் நீராதாரமாக திகழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில், இந்த ஆறுகளை பாதுகாக்கும் நடவடிக்கையாக, குடிநீர் கட்டணங்களுடன் பசுமை வரியை விதிக்க வனத்துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஒரு வாரத்திற்குள் முன்மொழிவை தயார் செய்யும்படி, அதிகாரிகளுக்கு வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் காந்த்ரே ஆணையிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: இந்த ஆறுகளின் மூலம் பயனடையும் பகுதிகளில் குடிநீர் கட்டணங்களுடன் பசுமை வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கட்டணத்துடன் ரூ.2 முதல் ரூ.3 வரை கூடுதலாக செலுத்துவதன் மூலம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். இந்த நிதி வேறு எந்தத் திட்டங்களுக்கும் பயன்படுத்தப்பட மாட்டாது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காகவும், வனங்களின் மேம்பாடு மற்றும் மரங்கள் நடுவதற்கும், விலங்குகளின் வலசை பாதைகளை உருவாக்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் எனக் கூறினார்.

