டிச., மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.75 லட்சம் கோடி: 6.1 சதவீதம் அதிகம்
டிச., மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.75 லட்சம் கோடி: 6.1 சதவீதம் அதிகம்
UPDATED : ஜன 01, 2026 04:44 PM
ADDED : ஜன 01, 2026 04:29 PM

புதுடில்லி: கடந்த 2025ம் ஆண்டின் டிசம்பர் மாதம் நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வசூல் 1.75 லட்சம் கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: டிசம்பர் மாதம் 1,74,550 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூல் ஆகியுள்ளது. அதில், சிஜிஎஸ்டி 34,289 கோடி, எஸ்ஜிஎஸ்டி 41,368 கோடி, ஐஜிஎஸ்டி 98,394 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டு டிசம்பர் மாதம் வசூல் ஆன 1.64 லட்சம் கோடியை விட 6.1 சதவீதம் அதிகம் ஆகும்.
2025 டிச., மாதம் ஜிஎஸ்டி வசூலில் சிஜிஎஸ்டி மற்றும் எஸ்ஜிஎஸ்டி வசூல் அதிகரித்து இருந்தாலும் ஐஜிஎஸ்டி வசூல் சரிவை சந்தித்துள்ளது.
2025 -2026 நிதியாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 16.5 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூல் ஆகி உள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை காட்டிலும் 8.6 சதவீதம் அதிகம் ஆகும்.
மேலும் 2024 - 2025 நிதியாண்டில் மொத்த ஜிஎஸ்டி வசூலானது 22.08 லட்சம் கோடி ரூபாய் ஆக இருந்தது. 2017 ல் ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 1.82 லட்சம் கோடி ரூபாய் வசூல் ஆகியது. வளர்ந்து வரும் பொருளாதார நடவடிக்கைள் காரணமாக ஆண்டுதோறும் மொத்த ஜிஎஸ்டி வசூலும் அதிகரித்து வருகிறது. 2020- 2021 ல் 11.37 லட்சம் கோடி ரூபாய் ஆக இருந்த மொத்த ஜிஎஸ்டி வசூல் 2023- 24 நிதியாண்டில் 20.18 லட்சம் கோடி ரூபாய் ஆக அதிகரித்தது. இவ்வாறு அநு்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முந்தைய மாத ஜிஎஸ்டி வசூல் விவரம்
* நவம்பர் மாதம் - ரூ.1.70 லட்சம் கோடி
* அக்டோபர் மாதம் - ரூ.1.96 லட்சம் கோடி
* செப்டம்பர் மாதம் - ரூ.1.89 லட்சம் கோடி
* ஆகஸ்ட் மாதம் -- ரூ.1.86 லட்சம் கோடி
* ஜூலை மாதம் - ரூ.1.96 லட்சம் கோடி
* ஜூன் மாதம்-- ரூ.1.84 லட்சம் கோடி
* மே மாதம் - ரூ.2.01 லட்சம் கோடி
* ஏப்ரல் மாதம் - ரூ.2.36 லட்சம் கோடி
* மார்ச் மாதம் - - ரூ.1.96 லட்சம் கோடி
* பிப்., மாதம் - ரூ.1.84 லட்சம் கோடி
* ஜன., மாதம் - ரூ.1.96 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகி உள்ளது

