ADDED : அக் 17, 2025 12:54 AM
காந்தி நகர்: குஜராத்தில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், முதல்வர் பூபேந்திர படேலை தவிர்த்து, அனைத்து அமைச்சர்களும் நேற்று கூண்டோடு ராஜினாமா செய்தனர்.
பா.ஜ.,வைச் சேர்ந்த குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், நிர்வாகக் காரணங்களுக்காக மாநில அமைச்சரவையை மாற்றி அமைக்க முடிவு செய்தார். அதன்படி, அவரை தவிர்த்து, குஜராத் அமைச்சர்கள் அனைவரும் நேற்று ராஜினாமா செய்தனர். இதை, முதல்வர் பூபேந்திர படேல் ஏற்றுக் கொண்டார்.
குஜராத் அமைச்சரவையில் முதல்வர் உட்பட மொத்தம் 17 அமைச்சர்கள் இருந்தனர். இதில், எட்டு கேபினட் அமைச்சர்கள், எட்டு இணை அமைச்சர்கள் அடங்குவர்.
இந்நிலையில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கிறது. காந்தி நகரில் நடக்கும் விழாவில், கவர்னர் ஆச்சார்யா தேவ்ரத் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
புதிய அமைச்சரவையில், ஹர்ஷ் சங்வி, ருஷிகேஷ் படேல் ஆகியோருக்கு மட்டுமே மீண்டும் இடம் வழங்கப்படும் என்றும், 10 புதுமுகங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.