துப்பாக்கி லைசென்ஸ் ரத்து? போலீசுக்கு தர்ஷன் கடிதம்!
துப்பாக்கி லைசென்ஸ் ரத்து? போலீசுக்கு தர்ஷன் கடிதம்!
ADDED : ஜன 17, 2025 07:19 AM

பெங்களூரு: 'தற்காப்புக்காக வைத்துள்ள துப்பாக்கிக்கான லைசென்சை ரத்து செய்ய வேண்டாம்' என நகர போலீசுக்கு, நடிகர் தர்ஷன் கடிதம் எழுதி உள்ளார்.
சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உட்பட 12 பேர் ஜாமினில் உள்ளனர். ஜாமினை ரத்து செய்ய கோரி, உச்ச நீதிமன்றத்தில், மாநில போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.
கொலை வழக்கில் தர்ஷனை போலீசார் கைது செய்யும் போது, லைசென்ஸ் பெறப்பட்ட துப்பாக்கியை அவர் வைத்திருந்தார்.
தற்போது ஜாமினில் வெளியில் உள்ளதால், இதை காட்டி, சாட்சிகளை மிரட்ட வாய்ப்பு உள்ளது என போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே, லைசென்சை ரத்து செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக, தர்ஷனுக்கு போலீசார், ஜன., 7 ல் கடிதம் அனுப்பி, 'உங்களின் துப்பாக்கிக்கான லைசென்சை ஏன் ரத்து செய்யக்கூடாது' என கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்கு தர்ஷன் அனுப்பிய பதில் கடிதத்தில், 'மாநிலத்தில் நான் பிரபலமாக இருக்கும் நபர். நான் எங்கு சென்றாலும், மக்கள் என்னை பார்க்க கூடிவிடுவர். எனக்கென தனி செக்யூரிட்டிகள் இருந்தாலும், என்னை தற்காத்து கொள்ள துப்பாக்கி தேவைப்படுகிறது. எனவே, லைசென்சை ரத்து செய்ய வேண்டாம்.
'தற்போது என் மீது நிலுவையில் உள்ள வழக்கை பொறுத்த வரையில், சாட்சிகள் யாரும் அச்சுறுத்தப்பட மாட்டார்கள். இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால், உரிய நடவடிக்கை எடுக்கலாம்' என குறிப்பிட்டு உள்ளார்.