சமூக வலைதள ஆய்வுக்காக இந்தியர்களின் 'எச்1பி' விசா நேர்காணல்கள் ரத்து
சமூக வலைதள ஆய்வுக்காக இந்தியர்களின் 'எச்1பி' விசா நேர்காணல்கள் ரத்து
ADDED : டிச 11, 2025 12:32 AM

புதுடில்லி: அமெரிக்காவில் பணிபுரிவதற்கான, 'எச்1பி' விசாவுக்கு விண்ணப்பித்த இந்தியர்களின் சமூக வலைதள கணக்குகளை அந்நாட்டின் வெளியுறவு துறை ஆய்வுக்கு உட்படுத்த உள்ளதால், டிசம்பர் 15 முதல், அடுத்த ஆண்டு மார்ச் வரை அவர்களுக்கான நேர்காணல்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் வேலை செய்ய விரும்பும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளை சேர்ந்த திறன் வாய்ந்த வெளிநாட்டு பணியாளர்களுக்கு, எச்1பி விசா வழங்கப்படுகிறது.
இந்த விசாக்களை இந்திய தகவல் தொழில்நுட்ப துறையினர் அதிகம் பெறுகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சகம், விசா தொடர்பாக சமீபத்தில் புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டது.
அதில், 'எச்1பி மற்றும் எச்4' விசா விண்ணப்பதாரர்கள் அனைவரும் தங்கள் சமூக வலைதள கணக்குகளை மறைத்து வைக்கக் கூடாது. அவற்றை பொது கணக்காக மாற்ற வேண்டும். அவை அனைத்தும் டிசம்பர் 15 முதல் ஆய்வு செய்யப்படும்' என கூறியிருந்தனர்.
இந்த சோதனை காரணமாக எச்1பி விசா நேர்காணல்களுக்கு அழைக்கப்பட்டிருந்த இந்தியர்களின் முன்பதிவுகள் அனைத்தையும் டிசம்பர் 15 முதல் ரத்து செய்வதாக, இந்தியாவுக்கான அமெரிக்கா துாதரகம் அறிவித்துள்ளது. மார்ச் மாதத்துக்கு பின்னரே அவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட உள்ளனர்.
இந்த புதிய விதியால், அமெரிக்க வேலை கனவுடன் இருந்த ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பெரும் இடையூறை சந்திக்கின்றனர்.

