ரூ.2.50 லட்சம் கோடி வருவாய் எச்.ஏ.எல்., நிறுவனம் எதிர்பார்ப்பு
ரூ.2.50 லட்சம் கோடி வருவாய் எச்.ஏ.எல்., நிறுவனம் எதிர்பார்ப்பு
ADDED : பிப் 13, 2025 05:14 AM

எலஹங்கா: எச்.ஏ.எல்.,லின் வருவாய் 2.50 லட்சம் கோடி உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக, அதன் தலைமை நிர்வாக இயக்குநர் டி.கே.சுனில் கூறி உள்ளார்.
பெங்களூரு எலஹங்காவில் விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் பெங்களூரில் உள்ள எச்.ஏ.எல்., எனும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் பங்கேற்று உள்ளது. இங்கு, எல்.யூ.எச்., - எல்.சி.ஏ., போன்ற பல விமானங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இங்கு தயாரிக்கப்பட்ட விமானங்கள் சாகச நிகழ்ச்சிகளில் பங்கேற்று உள்ளன. மேலும், இந்த ஹெலிகாப்டர்கள் பொது மக்களின் பார்வைக்கு காட்சி படுத்தப்பட்டு உள்ளன.
தற்போது உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஹெலிகாப்டர்களின் தேவை அதிகரித்து உள்ளது. இதனால், எச்.ஏ.எல்.,லில் தயாரிக்கப்படும் ஹெலிகாப்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இது குறித்து, விமான கண்காட்சியில் கலந்து கொண்ட எச்.ஏ.எல்.,லின் தலைமை நிர்வாக இயக்குநர் டி.கே.சுனில் கூறியதாவது:
எச்.ஏ.எல்.,லில் கடந்த டிசம்பர் மாதம் வரை 1.30 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான ஆர்டர்கள் வந்து உள்ளன. தற்போது, குறைந்த எடை கொண்ட எல்.யூ.எச்., ஹெலிகாப்டர்களை செய்வதற்கு அதிக ஆர்டர்கள் வந்து உள்ளன. இந்த வகையான ஹெலிகாப்டர்களுக்கு வெளிநாடுகளில் இருந்தும் ஆர்டர்கள் வந்து உள்ளன. இதன் மூலம் அடுத்து ஐந்து அல்லது ஆறு மாதங்களில் 1.20 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும்.
இதன் மூலம் எச்.ஏ.எல்.,லின் மொத்த வருவாய் 2.50 லட்சம் கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமின்றி 97 தேஜஸ் ஜெட், 156 எல்.சி.ஏ., ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் அடுத்த ஆறு மாதங்களில் முடிவடையும்.
உற்பத்தி வேகத்தை அதிகரிப்பதற்காக டாடா மற்றும் எல் அண்டி டி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு உள்ளன.
இருப்பினும், வெளிநாடுகளுக்கு ராணுவ விமானங்களை ஏற்றுமதி செய்வதில் பல சவால்கள் உள்ளன. இதனால், மலேஷியா, பிலிப்பைன்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் ஹெலிகாப்டர்களை தயாரிப்பதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.
அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட விமானங்கள் தயாரிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக 2,500 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.