பழைய 'வாக்கி டாக்கி'யுடன் மல்லுக்கட்டும் போலீசார்
பழைய 'வாக்கி டாக்கி'யுடன் மல்லுக்கட்டும் போலீசார்
ADDED : நவ 28, 2025 03:02 AM

சென்னை: 'ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பின், போலீஸ் நிலையங்களுக்கு புதிய 'வாக்கி டாக்கி' தராததால், பழுதான பழைய வாக்கி டாக்கியுடன் மல்லுக்கட்ட வேண்டியுள்ளது' என, போலீசார் புலம்புகின்றனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது:
காவல் துறையை நவீனமயமாக்கும் திட்டத்திற்கு, 2017 - 2018ல் 47.56 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில், 10,000 வாக்கி டாக்கிகள் வாங்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால், அனுமதிக்கப்பட்ட தொகைக்கு மாறாக, 83.45 கோடி ரூபாய்க்கு 'டெண்டர்' விடப்பட்டு, அதிக விலை கொடுத்து, 4,000 வாக்கி டாக்கிகள் வாங்கப்பட்டன.
விதிமீறல்கள் டெண்டர் விட்டதில், 11 வகை விதிமீறல்கள் நடந்திருப்பதாக, அப்போது உள்துறை செயலராக இருந்த நிரஞ்சன் மார்டி, காவல் துறை தலைமை அலுவலகத்திற்கு கடிதம் எழுதினார்.
டெண்டர் இறுதி செய்யப்பட்ட நிறுவனம், வாக்கி டாக்கி வாங்க, 12 சதவீதம் ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும். ஆனா ல், 28 சதவீதம் செலுத்தி, அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தப் பட்டது.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார், குற்றச்சாட்டில் சிக்கிய போலீஸ் அதிகாரிகள் உட்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களின் வீடுகளில் சோதனையும் நடந்தது.
இந்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பின், போலீஸ் நிலையங்களுக்கு புதிய வாக்கி டாக்கி தரப்படவில்லை. பழைய வாக்கி டாக்கிகளில் பேட்டரி வேலை செய்யவில்லை.
செயல்பாட்டில் உள்ள வாக்கி டாக்கிகளும் 'கர கர'வென சத்தம் எழுப்புவதால், அவற்றுடன் மல்லுக்கட்ட வேண்டியுள்ளது.
ரோந்து செல்லும் போலீசார் அனைவருக்கும் கொடுக்க, வாக்கி டாக்கிகள் இல்லை. தற்போது அனைவரிடமும் மொபைல் போன் இருப்பதால், தகவல் தொடர்பில் சிக்கல் இல்லை என போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சம்பவ இடங்களுக்கு சென்று, 'செல்பி' எடுத்து அனுப்புங்கள் என உத்தரவிடுகின்றனர். இதனால், வாக்கி டாக்கி பயன்பாடு தேவையற்றது போல பிம்பத்தை ஏற்படுத்த முயல்கின்றனர்.
திருடர்கள் ஓடுவர் ஆனால், ஒரே நேரத்தில் எல்லா போலீசாருக்கும், மொபைல் போனில் உத்தரவு பிறப்பிக்க முடியுமா? ஒளிரும் விளக்குடன் செல்லும் வாகனம் மற்றும் வாக்கி டாக்கி சத்தத்தை கேட்டாலே, திருடர்கள் ஓட்டம் பிடிப்பர்.
குற்றத்தில் ஈடுபட நினைப்பவர் கூட தயங்குவர். இதனால், 1,300க்கும் மேற்பட்ட போலீஸ் நிலையங்களில் பழுதாகி கிடக்கும் வாக்கி டாக்கிகளை அதிகாரிகள் திரும்ப பெற வேண்டும்.
நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய வாக்கி டாக்கிகளை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

