பேரிடர் நிதியை முறையாக பயன்படுத்த வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
பேரிடர் நிதியை முறையாக பயன்படுத்த வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
ADDED : நவ 28, 2025 03:13 AM

சென்னை: ''பேரிடர் மேலாண்மைக்கு தேவையான நிதியை முறையாக ஒதுக்கீடு செய்து, மக்களுக்காக அதிகாரிகள் பயன்படுத்த வேண்டும்,'' என, முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
'தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை மாவட்டங்களில், கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்' என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
ஆலோசனை இது தொடர்பாக, எடுக்க வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து, முதல்வர் ஸ்டாலின் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
தமிழகத்தில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, பேரிடர் மேலாண்மை நடைமுறைகள் சிறந்த முறையில் கையாளப்படுகின்றன. நான்கு ஆண்டுகளில், 1,740 கோடி ரூபாயில், பல்வேறு பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
பேரிடர் நிவாரண பணிகளுக்கு, மத்திய அரசு ஒதுக்கீடு செய்த தொகையை விட, தமிழக அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்கிறது.
மழை காலங்களில் அதிகம் பாதிக்கப்படுவது ஏழை மக்கள் தான்.
அதனால், அரசு பொறுப்பேற்றது முதல், பேரிடர் மேலாண்மையில் தனிக்கவனம் செலுத்தி, இயற்கை இடர்ப்பாடுகளின் பாதிப்பை குறைக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது; அது தொடர வேண்டும்.
அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு தயார் நிலையில் இருக்க வேண்டும்.
அடிப்படை வசதி பேரிடர் மேலாண்மைக்கு தேவையான நிதியை முறையாக ஒதுக்கீடு செய்து, மக்கள் பயன்பெறும் வகையில் அதிகாரிகளின் பணி அமைய வேண்டும். நாளை மற்றும் நாளை மறுநாள், சில மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
எனவே, வருவாய், உள்ளாட்சி, காவல், தீயணைப்பு, மீன்வளம், மக்கள் நல்வாழ்வு உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து, மக்கள் பணியாற்ற வேண்டும்.
தேவையான மாவட்டங்களுக்கு, கண்காணிப்பு அதிகாரிகளை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். மீட்பு மற்றும் நிவாரண மையங்களை தயார் நிலையில் வைத்து, மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை முறையாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
தலைமைச் செயலர் ஏற்கனவே அறிவுறுத்தியபடி, அனைத்து கலெக்டர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
இக்கூட்டத்தில், அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன், தலைமைச் செயலர் முருகானந்தம், வருவாய் நிர்வாக ஆணையர் சாய்குமார், எரிசக்தி துறை செயலர் மங்கத் ராம் சர்மா, ஊரக வளர்ச்சி துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, வருவாய் துறை செயலர் அமுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

