ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஹமாஸ் ஒன்று கூடிய பயங்கரவாதிகள்
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஹமாஸ் ஒன்று கூடிய பயங்கரவாதிகள்
ADDED : பிப் 06, 2025 03:17 AM
புதுடில்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பல்வேறு இயக்கங்களை சேர்ந்த பயங்கரவாதிகள் ஒன்று கூடி நடத்திய ஆலோசனை கூட்டத்தில் ஹமாஸ் பயங்கரவாதிகள் பங்கேற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச அளவில் பயங்கரவாதிகளுக்கு புகலிடமாக பாகிஸ்தான் இருந்து வரும் நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ரவலாகோடேவில் உள்ள ஷாஹீத் ஷபிர் ஸ்டேடியத்தில், பல்வேறு பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர்.
பிப்., 5ம் தேதியை காஷ்மீர் ஒற்றுமை தினம் என பாகிஸ்தான் கூறி வருவதையொட்டி நடந்த இந்த கூட்டத்தில், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் இயக்கத்தின் காலித் அல் கடாமி பங்கேற்றுள்ளார். முதன் முறையாக காஷ்மீர் பயங்கரவாதிகள் கூட்டத்தில் ஹமாஸ் இயக்கம் பங்கேற்றுள்ளது.
இந்த கூட்டத்தில் ஜெய்ஷ் - இ - முகமது, லஷ்கர், ஜமாத் - உலேமா - இ - இஸ்லாம் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
நம் நாட்டில் 2001ல் நடந்த பார்லி., தாக்குதல், 2008 மும்பை தாக்குதல், 2019 புல்வாமா தாக்குதல்களுக்கு இந்த பயங்கரவாத அமைப்புகளே காரணம்.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் அதிகாரப்பூர்வ ஆலோசனை கூட்டம் நடந்ததன் வாயிலாக, பயங்கரவாதிகளின் கூடாரமாக பாகிஸ்தான் தொடர்ந்து செயல்படுகிறது என்பது உறுதியாகி உள்ளது.