ADDED : செப் 21, 2024 11:24 PM

மைசூரின் மேடகள்ளியில், கைவினை பொருட்கள் மேளா துவங்கப்பட்டுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள பல்வேறு கலைப்பொருட்கள், மக்களின் கவனத்தை ஈர்க்கின்றன.
உலக பிரசித்தி பெற்ற தசரா திருவிழாவை முன்னிட்டு, மைசூரின், மேடகள்ளியில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை மேளா நடந்து வருகிறது.
நகரின் பல இடங்களில் வெவ்வேறு மேளாக்கள் நடக்கும் என்றாலும், மேடகள்ளியில் நடக்கும் மேளா, மிகவும் சிறப்பானது.
மேடகள்ளியின், அர்பன் ஹாத்தில் மேளா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாநில, தேசிய விருதுபெற்ற கைவினை பொருட்கள் தயாரிப்பு கலைஞர்கள், நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான கலைப்பொருட்கள், மேளாவில் இடம் பெற்றுள்ளன.
மரத்தால் செதுக்கப்பட்ட அற்புதமான கலை நுணுக்கங்கள் கொண்ட அலங்கார பொருட்கள், வெண்கல விக்ரகங்கள், சிற்பங்கள், பலவிதமான வடிவங்கள் கொண்ட மண்பானைகள், ரத்ன கம்பளம், பருத்தி ஜமுக்காளம், இமிடேஷன் ஆபரணங்கள.
கலை ஓவியங்கள், தோல் உற்பத்திகள், கலைநயமிக்க தோல் செருப்புகள், சென்னப்பட்டணா பொம்மைகள், மனத்தை மயக்கும் வடிவங்கள் கொண்ட, எம்ப்ராய்டரி ஒர்க் செய்யப்பட்ட சேலைகள், கைத்தறி சேலைகள்.
வெள்ளியால் தயாரிக்கப்பட்ட கலைப் பொருட்கள் உட்பட, பல்வேறு பொருட்கள் மக்களை ஈர்க்கின்றன.
இப்போதே முதன் முறையாக, குஜராத் மாநிலத்தின் அங்க நிறுவனமான குஜராத் கைத்தறி மற்றும் கைவினை மேம்பாட்டு ஆணையம், மைசூரின் கைவினை ப்பொருட்கள் மேளாவில் பங்கேற்றுள்ளது.
குஜராத் மாநில கலைஞர்கள் தயாரிப்புகளும் இடம்பெறும். குஜராத் மாநிலத்தின் பிரசித்தி பெற்ற படோலா சேலைகள், பாந்தினி சேலைகள், கலை நுணுக்கங்கள் கொண்ட படுக்கை விரிப்புகள், டவல்கள், குஷன் கவர்கள், மண்ணினால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என, கைவினை பொருட்கள், கைத்தறி உற்பத்திகள் இங்குள்ளன.
மைசூரின் மேளா வாயிலாக, கலைஞர்களிடம் இருந்து, நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு கைக்கெட்டும் விலையில் கிடைக்க, குஜராத் அரசு வழி வகுத்துள்ளது.
காலை 10:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை மேளா திறந்திருக்கும். மேளாவுக்கு வர, கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் வசதி உள்ளது.
- நமது நிருபர் -