பிரான்ஸ் தூதரிடம் கைவரிசை; டில்லியில் திருடர்கள் 4 பேர் கைது
பிரான்ஸ் தூதரிடம் கைவரிசை; டில்லியில் திருடர்கள் 4 பேர் கைது
ADDED : அக் 30, 2024 03:36 PM

புதுடில்லி: டில்லியின் புகழ் பெற்ற சாந்தினி சவுக் சந்தையில், பிரான்ஸ் துாதர் தியரி மாத்துாவிடம் மொபைல் போனை திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 20ம் தேதி அன்று அப்பகுதியில் உள்ள ஜெயின் கோவிலுக்கு சென்ற தியரி மற்றும் அவரது மனைவி இருவரும், அருகே உள்ள சந்தைக்குச் சென்றனர்.
அப்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது. பிரான்ஸ் தூதர் உடனடியாக ஆன்லைன் மூலம் புகார் அளித்தார்.
சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:பிரான்ஸ் துாதர் சட்டைப் பையில் இருந்த மொபைல் போனை, குற்றம் சாட்டப்பட்டவர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
அக்டோபர் 21 அன்று தூதரகத்திலிருந்து இந்த சம்பவம் தொடர்பாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.
குற்றவாளியை கண்டுபிடிக்க, சாந்தினி சவுக் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை சோதனை செய்து சந்தேகத்தின் பேரில் விசாரித்ததில் உண்மை தெரியவந்தது.
குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் 20 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்கள் டிரான்ஸ்-யமுனா பகுதியில் வசிப்பவர்கள் என்று தெரியவந்தது.
கைதானவர்களிடம் மொபைல் போனை மீட்டு அதனை மீண்டும் தூதரிடம் ஒப்படைத்து விட்டோம். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.