ADDED : டிச 14, 2024 11:23 PM

கொப்பால்: ராமாயண கால வரலாற்றை கொண்ட கங்காவதி தாலுகாவில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் உள்ள ஆஞ்சநேயசுவாமி கோயிலில் 'ஹனுமா மாலா' வைபவம் கோலாகலமாக நடந்தது.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் ஹனுமன் மாலை அணிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடுமையான விரதத்தை மேற்கொண்டு, அஞ்சனாத்ரி மலைக்கு வருவர்.
இந்த ஆண்டும் அதேபோல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து வந்தனர்.
இதையொட்டி அஞ்சனாத்ரி மலை முழுவதும் வாழை மரங்கள், தென்னை மரங்கள், மலர்கள், தோரணங்கள், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
பாதயாத்திரையாக வந்த பக்தர்களுக்கு உள்ளூர் பக்தர்கள் பிரசாதம், தண்ணீர் வழங்கினர்.
மலை உச்சியில் உள்ள ஹனுமனுக்கு 9 நதிநீரால் அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், குங்குமச் சடங்கு, மஹாமங்களாரத்தி, குங்குமம் பூசுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. மலையில் இந்து அமைப்புகள் சார்பில் பவன் ஹோமம் நடத்தப்பட்டது.
மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, மாலை அணிந்த பக்தர்கள் வந்திருந்தனர்.
ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கு வந்ததால், எங்கும் பக்தர் வெள்ளம் காணப்பட்டது. பூஜை முடிந்த பின், பக்தர்கள் மாலையை கழற்றி விரதத்தை நிறைவு செய்தனர்.
ஐந்து நாட்களுக்கு முன்பே, ஹனுமன் மாலை அணிவித்த எம்.எல்.ஏ., ஜனார்த்தன ரெட்டி, அதிகாலையில் மலைக்கு வந்து அஞ்சனாத்திரி மலை அடிவாரத்தில் பூஜை செய்தார்.