1,500 ஆண்டு வரலாறு கொண்ட ஹரியும், ஹரனும் சேர்ந்த ஹரிஹரா ஹரியும் ஹரனும் சேர்ந்த ஹரிஹரா கோவில்
1,500 ஆண்டு வரலாறு கொண்ட ஹரியும், ஹரனும் சேர்ந்த ஹரிஹரா ஹரியும் ஹரனும் சேர்ந்த ஹரிஹரா கோவில்
ADDED : டிச 24, 2024 06:34 AM

தாவணகெரேவின் ஹரிஹரா புராதன பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். இது, 'ஹரிஷபுரா, குஹாரண்யா, கூடுர், கூடலுார்' உட்பட பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. ஹரியும், ஹரனும் சேர்ந்திருப்பதால், ஹரிஹரா என்ற பெயர் ஏற்பட்டதாம்.
ஹரியும், ஹரனும் இணைந்து குஹாசுரா என்ற அசுரனை மிதித்து, பாதாளத்தில் தள்ளிய இடம் இதுவாகும். இதே காரணத்தால் கூடலுார், கூடுர் எனவும் பெயர் வந்தது.
இங்கு பாயும் துங்கபத்ரா ஆற்றுக்கு அருகில், ஹரித்ரா ஓடை பாய்கிறது. ஹரிஹராவுக்கு 1,500 ஆண்டுகள் வரலாறு உள்ளது.
இங்குள்ள ஹரி ஹரேஷ்வரா கோவில், 800 ஆண்டு பழமையானது. சாளுக்கியர் காலத்தில் கட்டப்பட்டதாகும்.
கோவிலின் வெளியிலும், ஹரிஹரா சுற்றுப்பகுதிகளின் கிராமங்களிலும், 50க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. கோவிலை பற்றிய அனைத்து விபரங்களும் கல்வெட்டில் உள்ளன.
மூலஸ்தானத்தில் உள்ள ஹரி ஹரேஷ்வரா சுவாமியின் விக்ரகம் மாறுபட்டதாகும். கோவிலின் வடக்கு, தெற்கு திசைகளில் இரண்டு நுழைவு வாசல்கள் உள்ளன. இது மிகவும் அபூர்வமாகும். மண்டபத்தில் மிகவும் அழகான 60 கம்பங்கள் உள்ளன.
அதிநவீன இயந்திரங்கள் இல்லாத அந்த காலத்தில், கலை நுணுக்கத்துடன் கம்பங்கள் கட்டப்பட்டுள்ளன. மண்டபத்தில் நுாற்றுக்கணக்கானோர் படுத்து உறங்கலாம். அந்த அளவுக்கு விசாலமானது. ஹொய்சாளர்களின் சிற்ப திறனுக்கு, இக்கோவில் சிறந்த எடுத்துக்காட்டு.
ஹரியை தவிர வேறு கடவுள் இல்லை என, சிலர் கூறுவர்; வேறு சிலர் ஹரனை தவிர வேறு தெய்வம் இல்லை என, வாதிடுவர். ஹரியும், ஹரனும் ஒன்று என்பதை உணர்த்தவே, இங்கு ஹரி ஹரேஷ்வரா குடிகொண்டுள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.
தினமும் அதிகாலை 5:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரையிலும், மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை, ஹரி ஹரேஸ்வராவை தரிசிக்கலாம். கூடுதல் தகவல் வேண்டுவோர், 080 - 2235 2828 என்ற தொலைபேசியில், தொடர்பு கொள்ளலாம்.