ADDED : ஜன 15, 2026 07:15 AM

சபரிமலை: சபரிமலையில் இந்த ஆண்டுக்கான ஹரிவராசனம் விருது, நாதஸ்வர கலைஞர் ஜெய்சங்கருக்கு வழங்கப்பட்டது.
கேரளா அரசும், திருவிதாங்கூர் தேவசம் போர்டும் இணைந்து, கலைத்துறையில் சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு, சபரிமலையில் ஹரிவராசனம் விருது வழங்கி கவுரவிக்கிறது.
கடந்த, 2012-ல் பாடகர் இயேசுதாசுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. வீரமணி ராஜு, எஸ்.பி., பாலசுப்ரமணியம், சுசீலா, சித்ரா, கங்கை அமரன் உள்ளிட்ட பல பாடகர்கள் இந்த விருதை பெற்றுள்ளனர்.
தொடர்ந்து, நேற்று கேரளாவை சேர்ந்த நாதஸ்வர கலைஞர் ஜெய்சங்கருக்கு வழங்கப்பட்டது. இவ்விருது, நினைவு பரிசு, ஒரு லட்ச ரூபாய் மற்றும் பாராட்டு பத்திரம் அடங்கியது. கேரள தேவசம் மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் வாசன் இந்த விருதை வழங்கினார்.
திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் கே.ஜெயக்குமார் வரவேற்றார். பிரமோத் நாராயணன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். தேவசம் போர்டு உறுப்பினர்கள் ராஜு, சந்தோஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் கே.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:
சபரிமலை உள்ளிட்ட திருவிதாங்கூர் தேவசம்போர்டு கோவில்களில், ரசீதுகள் கம்ப்யூட்டர்மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சபரிமலை நெய் மோசடி தொடர்பாக, சுஜித் குமார் போத்தி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளனர். 430 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இதில் அரவணை விற்பனை மூலம் மட்டும் 190 கோடி ரூபாயும், காணிக்கையாக 110 கோடி ரூபாயும் கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டை விட அதிக வருமானம் வந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

