இதெல்லாம் ரொம்ப தவறுங்க; இண்டிகோவுக்கு இணையத்தில் இடி: களமிறங்கி கதறடித்த பிரபலம்!
இதெல்லாம் ரொம்ப தவறுங்க; இண்டிகோவுக்கு இணையத்தில் இடி: களமிறங்கி கதறடித்த பிரபலம்!
ADDED : ஆக 25, 2024 11:27 AM

புதுடில்லி: வயதான தம்பதியை இருக்கை மாறி உட்கார சொன்ன, இண்டிகோ குழுவினரை பிரபல கிரிக்கெட் விமர்சகரும், வர்ணனையாளருமான ஹர்ஷா போக்லே சமூக வலைதளத்தில் கண்டித்தார். நடந்த சம்பவத்துக்கு இண்டிகோ நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.
இண்டிகோ விமான நிறுவனத்தின் சேவை குறித்து வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தி இருந்து வருவது தெரிந்த விஷயம் தான். இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 25) விமானத்தில் வயதான தம்பதியின் இருக்கைகளை மாற்றியதற்காக, இண்டிகோ நிறுவனத்தை பிரபல கிரிக்கெட் விமர்சகரும், வர்ணனையாளருமான ஹர்ஷா போக்லே கடுமையாக சாடியுள்ளார்.
இருக்கை விவகாரம்
அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,''4ம் இருக்கைக்கு டிக்கெட் எடுத்த வயதான தம்பதியை விளக்கம் ஏதும் அளிக்காமல், 19வது இருக்கைக்கு இண்டிகோ விமானி மாற்றினார். அந்த வயதான தம்பதி, நீண்ட நேரமாக போராடி சென்றனர். நடக்க முடியாமல், அந்த முதியவர் குறுகிய பாதையில் தட்டுத்தடுமாறியபடி சென்றதை பார்க்கவே கஷ்டமாக இருந்தது.
வயதான பயணிகளுக்கு இப்படி ஒரு துன்பம் கொடுத்ததை பொறுத்து கொள்ள முடியாது. இது அநியாயம் என்று பயணிகள் சிலர் எதிர்த்துக் குரல் கொடுத்ததை தொடர்ந்து, மீண்டும் அந்த தம்பதிக்கு அவர்கள் கேட்டிருந்த இருக்கை ஒதுக்கித் தரப்பட்டது. ஆனால், இதற்காக அவர்கள் சிரமப்பட்டு குரல் கொடுக்க வேண்டியிருந்தது. எப்போதும் பயணிகள் வசதிக்கே முன்னுரிமை அளிக்குமாறு ஊழியர்களுக்கு இண்டிகோ நிறுவனம் அறிவுறுத்த வேண்டும்.
வெற்றிகரமாக ஒரு பணியை செய்யும்போது, அதற்கு தகுந்தபடி பொறுப்பும் அதிகரிக்க வேண்டும். இந்திய தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை கண்டு பெருமைப்படுபவன் என்ற முறையில், பயணிகளின் உணர்வுகளுக்கு நீங்கள் மதிப்பளிக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன்; அக்கறையற்ற செயல்பாடு நிறுவன வழிமுறையாகி விடக்கூடாது,'' என குறிப்பிட்டு இருந்தார்.
இண்டிகோ பதில்
இதற்கு பதில் அளித்து இண்டிகோ நிறுவனம் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு: வாடிக்கையாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியதற்கு மனப்பூர்வமாக வருந்துகிறோம். போக்லே, இதை எங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்து, எங்களுடன் பேசுவதற்கு நேரம் ஒதுக்கியதற்கு நன்றி.
உங்கள் புரிதலை நாங்கள் உண்மையிலேயே பாராட்டுகிறோம். விரைவில் உங்களுக்கு மீண்டும் சேவை செய்ய எதிர் நோக்குகிறோம். பயணிகளுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் வசதியாகப் பயணம் செய்வதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு இண்டிகோ நிறுவனம் பதில் அளித்துள்ளது.

