ஹீரோ பறந்து அல்ல, புல்டோசரிலும் வருவார்! 9 பேரை காத்த சாமானியன்
ஹீரோ பறந்து அல்ல, புல்டோசரிலும் வருவார்! 9 பேரை காத்த சாமானியன்
ADDED : செப் 03, 2024 01:56 PM

ஹைதராபாத்: தெலுங்கானாவில் வெள்ளத்தில் சிக்கி தவித்த 9 பேரை புல்டோசரை எடுத்துச் சென்று மீட்ட சாமானியனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சினிமா ஹீரோக்கள்
பொதுவாக ஹீரோக்கள் என்பவர்கள் மக்களை காக்க பறந்து வருவார்கள், இல்லையென்றால் பந்தாவாக, ஸ்டைலாக வருவார்கள். இவை அனைத்தும் திரைப்படங்களில் கற்பனையாக உருவானவை. ஆனால் தெலுங்கானாவில் ஒருவர் புல்டோசரில் சென்று 9 பேரின் உயிரை மீட்டு ஹீரோவாக மக்களால் பாராட்டப்பட்டு வருகிறார்.
தவியாய் தவித்த மக்கள்
தெலுங்கானாவில் விடாது கொட்டித்தீர்த்த கனமழையால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறி இருக்கின்றன. எங்கு பார்த்தாலும் மழை, வெள்ளம் என மக்கள் தவியாய் தவித்து வருகின்றன. மாநில அரசு மீட்பு பணிகளில் இறங்கினாலும் ஆங்காங்கே மக்களும் சுயம்புவாக மாறி பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றி வருகின்றனர்.
9 பேர்
அப்படித்தான்... கம்மம் மாவட்டத்தில் பிரகாசம் பகுதியில் உள்ள பாலத்தில் 9 பேர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். முன்னேரு ஆற்றில் இருந்து வெள்ளமென பாய்ந்த தண்ணீர் அதிவேகத்துடன் சீறிப்பாய என்ன செய்வது என்று தெரியாமல் 9 பேரும் தவித்து அபயக்குரல் எழுப்பி உள்ளனர்.
உதவ கோரிக்கை
அவர்களின் நிலையைக் கண்ட பலர் அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு மாநில அரசிடம் உதவி கோரினர். தகவல் அறிந்த மாநில அரசும் ஹெலிகாப்டரை அனுப்பி வைக்க, மோசமான வானிலை காரணமாக குறிப்பிட்ட இடத்துக்கு ஹெலிகாப்டர் சென்று சேரவில்லை.
புல்டோசர்
இந்த விவரம் அறிந்த சுபான் கான் என்பவர் அடுத்த எடுத்த முயற்சி தான் அனைவரின் புருவங்களையும் உயர்த்தியது. புல்டோசர் ஒன்றை எடுத்துக் கொண்டு புறப்பட தயாரானார். அவரின் செயலைக் கண்ட அங்குள்ளவர்கள் வேண்டாம்... விபரீதம் என எச்சரிக்க, அதை புறம்தள்ளி புறப்பட்டார் சுபான்கான்.
போர்வீரன்
டிரைவர் இருக்கையில் ஒரு போர் வீரனாக அமர்ந்த அவர், இறந்தால் நான் ஒருவன் தான் இறப்பேன், ஆனால் நான் திரும்பி வந்தால் 9 பேர் இங்கு பிழைத்து இருப்பார்கள் என்று கூற, மக்களும் அவரின் தன்னம்பிக்கையை மெச்சி வாழ்த்தி அனுப்பினர்.
வாழ்த்துக்கள்
புல்டோசருடன் சென்ற சுபான் கான், சிறிதுநேர போராட்டத்துக்குப் பின்னர் 9 பேரையும் உயிருடன் மீட்டு திரும்பினர். அவரின் செயலை கண்டு ஊர்மக்கள் பாராட்ட, இதுபற்றிய விவரம் மாநில அரசுக்கு தெரிய வந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராமராவ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சுபான்கானை பாராட்டி உள்ளார். அவரின் தீரத்தை அறிந்த மக்கள் அனைவரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.