வெறுப்பு பேச்சு: பா.ஜ.,- - எம்.பி.,க்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
வெறுப்பு பேச்சு: பா.ஜ.,- - எம்.பி.,க்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
ADDED : மே 09, 2025 04:16 AM

புதுடில்லி : 'வெறுப்பு பேச்சுக்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்' என பா.ஜ.,- - எம்.பி., நிஷிகாந்த் துபேயின் சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வக்ப் திருத்தச் சட்டம் தொடர்பான வழக்குகளின் விசாரணையின்போது, 'அதில் உள்ள சில சட்ட விதிகளுக்கு இடைக்கால தடை விதிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
இதுபோல, மசோதாக்கள் மீது முடிவு எடுப்பதற்கு ஜனாதிபதிக்கு மூன்று மாத கால அவகாசம் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பா.ஜ.,- - எம்.பி., நிஷிகாந்த் துபே, ''நாட்டில் மதச் சண்டைகள், உள்நாட்டு கலவரங்கள் ஏற்பட்டால் உச்ச நீதிமன்றம், தலைமை நீதிபதி தான் பொறுப்பு,'' என கூறினார்.
குறுகிய உத்தரவு
இந்த சர்ச்சை கருத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 5ம் தேதியன்று, இந்த மனுவை விசாரணைக்கு எடுத்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
எனினும், இது தொடர்பாக குறுகிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். அதன்படி, நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
அரசியலமைப்பில் நீதிமன்றங்களின் பங்கு மற்றும் அரசியலமைப்பின் கீழ் அவற்றுக்கு வழங்கப்பட்டுள்ள கடமைகள் பற்றிய அறியாமையை நிஷிகாந்த் துபேவின் கருத்துகள் காட்டுகின்றன. கவனத்தை ஈர்ப்பதற்காக, இதுபோன்ற அபத்தமான அறிக்கைகளை அவர் வெளியிட்டுள்ளார்.
இத்தகைய அறிக்கையால், பூக்களைப் போல, எளிதில் வாடி, ஒடிந்து விடும் தன்மையில் நீதிமன்றங்கள் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறோம்.
அவரது அறிக்கை மிகவும் பொறுப்பற்றது. இத்தகைய கருத்துக்களால், மக்களின் பார்வையில் நீதிமன்றங்களின் மீதான நம்பிக்கையும் நம்பகத்தன்மையும் அசைக்கப்படும் என நாங்கள் கருதவில்லை. அதே நேரத்தில், அதற்கான ஒரு முயற்சி இது என்பதில் சந்தேகம் இல்லை.
குற்றவியல் நடவடிக்கை
உச்ச நீதிமன்றத்தின் முன் நிலுவையில் உள்ள நீதித் துறை நடவடிக்கைகளில் தலையிட முனைவது தெளிவாகிறது. எனவே, மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தவிர்க்கிறோம்.
எனினும், இந்த ரிட் மனுவை நாங்கள் விசாரணைக்கு ஏற்கவில்லை என்றாலும், வகுப்புவாத வெறுப்பைப் பரப்பும் எந்தவொரு முயற்சியும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறோம்.
வெறுப்பு பேச்சு என்பது, குறி வைக்கப்பட்ட ஒரு குழுவின் கண்ணியத்தை இழக்கச் செய்வதோடு சகிப்புத் தன்மையையும் அரித்து விடும். ஒரு குழுவை குறிவைத்து கொண்டு அவமானப்படுத்தும் எந்தவொரு முயற்சியும் குற்றவியல் குற்றம் என்பதால், அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.