UPDATED : ஜன 05, 2025 02:25 PM
ADDED : ஜன 05, 2025 02:20 PM

புதுடில்லி: 'டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்று, தாமரை மலரும்' என்று நம்பிக்கை வையுங்கள் என டில்லியில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
டில்லியில் 12 ஆயிரத்து 200 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை இன்று (ஜன.,05) பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அவர், மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்திற்கான புதிய அதிநவீன கட்டடத்திற்கும் அடிக்கல் நாட்டினார். பின்னர், நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
இன்று வளர்ச்சித் திட்டங்களைத் துவக்கி வைத்துள்ளேன். அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவிற்கும், டில்லிக்கும் மிக முக்கியமானவை; இந்த ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும். 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாற பங்களிப்பாளராக இருப்போம். டில்லி சட்டசபை தேர்தலில் தாமரை மலரும் என்று நம்பிக்கை வையுங்கள்.
டில்லியை வளர்ந்த இந்தியாவின், தலைநகராக நாம் உருவாக்க வேண்டும். இது எங்கள் கனவு. எனவே, டில்லியின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக பா.ஜ.,வுக்கு ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று மக்களை வலியுறுத்தவே நான் இங்கு வந்துள்ளேன். கடந்த 10 ஆண்டுகளில் டில்லி மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பா.ஜ., கடுமையாக உழைத்தது.
உலகின் 3வது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா மாறும். டில்லிக்கு ரூ.75,000 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்தியாவின் பாரம்பரியத்தின் மகத்தான வடிவத்தை வெளிப்படுத்தும் நகரமாக டில்லி இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
நமோ பாரத் ரயிலில் பயணித்த மோடி!
உ.பி. சாஹிபாபாத் - டில்லி நியூ அசோக் நகர் இடையே ரூ.4,600 கோடி மதிப்பீட்டில் நமோ பாரத் ரயிலை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். ரயிலில் பயணித்து, மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். இந்த வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

