ADDED : ஜூலை 29, 2025 09:38 PM

பாலக்காடு; பாலக்காடு அருகே, ரூ.1.58 கோடி ஹவாலா பணமுடன் இருவரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோவை- - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில், சந்திரநகர் பகுதியில் புதுச்சேரி (கசபா) இன்ஸ்பெக்டர் சுஜித் தலைமையிலான போலீசார், வாகன சோதனை நடத்தினர்.
அப்போது, கோவை பகுதியில் இருந்து திருச்சூர் நோக்கி அதிவேகமாக சென்ற கேஎல் 70 -எச் 1628 என்ற பதிவு எண் உள்ள காரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, காரில், எந்தவித ஆவணமும் இன்றி, பின்பக்க சீட்டிற்கு அடியில் உள்ள சிறப்பு அறையில், ஒரு கோடியே, 58 லட்சத்து, 71 ஆயிரத்து, 930 ரூபாய் பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து நடத்திய விசாரணையில், காரில் இருந்தவர்கள் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷனில், 26, ஜாகீர் ஹுசைன், 47, ஆகியோர் என்பதும், பெங்களூருவில் இருந்து திருச்சூருக்கு பணத்தை கொண்டு செல்வதும் தெரியவந்தது.
பறிமுதல் செய்த பணத்துடன், கைது செய்த இருவரையும் தொடர் விசாரணைக்காக வருமான வரித்துறையிடம் போலீசார் ஒப்படைத்தனர்.