'என்னை பேச விடாமல் தடுக்கிறார்': சபாநாயகர் மீது ராகுல் குற்றச்சாட்டு
'என்னை பேச விடாமல் தடுக்கிறார்': சபாநாயகர் மீது ராகுல் குற்றச்சாட்டு
ADDED : மார் 27, 2025 12:48 AM

புதுடில்லி : ஜனநாயகமற்ற முறையில் லோக்சபா நடத்தப்படுவதாகவும், தன்னை பேச விடாமல் சபாநாயகர் தடுப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பார்லிமென்டில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்கிறது. இந்த தொடரின்போது, பிரயாக்ராஜ் மஹா கும்பமேளா தொடர்பாக பிரதமர் மோடி உரையாற்றியபோது, தனக்கு பேச அனுமதி வழங்கவில்லை என லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறினார்.
அதற்கு விளக்கம் அளித்த சபாநாயகர் ஓம் பிர்லா, 'லோக்சபா விதி 372-ன் கீழ், பிரதமரோ அல்லது மத்திய அமைச்சரோ எந்த கேள்வியையும் எதிர் கொள்ளாமல், சபையில் அறிக்கை வெளியிடலாம்,' என கூறினார்.
இந்நிலையில், நேற்று லோக்சபாவில் சபாநாயகர் ஓம் பிர்லா பேசுகையில், “லோக்சபாவின் கண்ணியத்தை எம்.பி.,க்கள் பாதுகாக்க வேண்டும். சில எம்.பி.,க்களின் நடத்தை உயர் தரமாக இல்லை என்பதாக எனது கவனத்துக்கு வருகிறது. இந்த சபையில், தந்தை - மகள், தாய் - மகள், கணவன் - மனைவி என உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.
''லோக்சபாவில் உறுப்பினர்களின் நடத்தையை சுட்டிக் காட்டும் விதி 349-ன் படி, எம்.பி.,க்கள் நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் நடந்து கொள்வார் என நான் எதிர்பார்க்கிறேன்,” என்றார்.
இதை கேட்டு அதிர்ச்சியான ராகுல், ஏதோ பேச எழுந்தார். ஆனால் உடனே, சபாநாயகர் ஓம் பிர்லா, சபையை ஒத்தி வைத்தார். இதனால், ஆவேசமடைந்த ராகுல், ஜனநாயகமற்ற முறையில் லோக்சபா நடத்தப்படுவதாக குற்றஞ்சாட்டினார்.
பார்லிமென்ட் வளாகத்தில் அவர் அளித்த பேட்டி:
என்னைப் பற்றி ஆதாரமற்ற ஒன்றை சபாநாயகர் குறிப்பிட்டு கூறி விட்டு, அதன் பிறகு, எனக்கு பேச வாய்ப்பளிக்காமலேயே லோக்சபாவை ஒத்தி வைக்கிறார். பார்லிமென்டில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.
எதிர்க்கட்சி தலைவருக்கு லோக்சபாவில் பேச அனுமதி வழங்குவது வழக்கம். ஆனால், நான் எப்போது எழுந்து நின்றாலும், பேச விடாமல் தடுக்கின்றனர். இதனாலேயே, எதுவும் பேச முடியாமல் அமைதியாக அமர்ந்துள்ளேன். இது புது விதமான தந்திரம். இவ்வாறு அவர் கூறினார்.