கர்நாடகாவில் நாளுக்கு நாள் வெயில் அதிகரிப்பு சுகாதார துறை வழிகாட்டுதல்கள் வெளியீடு
கர்நாடகாவில் நாளுக்கு நாள் வெயில் அதிகரிப்பு சுகாதார துறை வழிகாட்டுதல்கள் வெளியீடு
ADDED : மார் 04, 2024 07:00 AM
பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் காய்ச்சல், தலைவலி, கண் உட்பட பல பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு, சுகாதார துறை வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது.
கடந்த மாதம் பிப்ரவரியிலேயே வெப்ப நிலை உயர்ந்தது. மாநிலத்தில் குறைந்தபட்ச வெப்ப நிலை 31 முதல் அதிகபட்சம் 37 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகிறது.
மக்கள் பாதிப்பு
இந்நேரத்தில் நீர்ச்சத்து குறைபாடு, வாந்தி பேதி, கண் அழற்சி, சின்னம்மை, டைபாய்டு, தலைசுற்றல், ஒற்றை தலைவலி, வெயிலின் தாக்கம், மூக்கடைப்பு, அதிகப்படியான சூரிய கதிர்களால் ஏற்படும் தோல் பிரச்னைகளால் மக்கள் பாதிக்கப்படுகின்றன.
வெயிலால் ஏற்படும் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக பொது மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, சுகாதார துறை அறிவுறுத்தி உள்ளது.
அறிவுரைகள்
நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். காய்ச்சிய நீரை குடிக்கவும். சூடான, சுத்தமான உணவு சாப்பிட வேண்டும். வெளியில் விற்கப்படும் உணவு, வெட்டிய பழங்களை சாப்பிடக்கூடாது. கைகளை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். மலம் கழிக்க கழிவறையை பயன்படுத்த வேண்டும்.
உடலில் உள்ள நீர், வியர்வையாக வெளியேறுவதால், உடலில் ஈரப்பதம் குறையும். உடலில் நீர்ச்சத்து குறைந்தால் பல பிரச்னைகள் ஏற்படும். எனவே, தண்ணீருடன், உடலுக்கு ஆற்றலையும், உயிர் சக்தியையும் அளிக்கும் பழச்சாறு, பானங்கள் குடிக்க வேண்டும். இதனால் உடலில் நீரின் அளவு அதிகரிக்கும்.
பருத்தி ஆடைகள்
வெயில் நேரத்தில் வெளியில் செல்லும் போது, பருத்தி ஆடைகள், கூலிங் கிளாஸ், குடைகள் உட்பட வெயிலில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ள, பொதுவான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
புதிதாக பிறந்த குழந்தைகள், கர்ப்பிணியர், வெளிப்புற வேலையாட்கள், மனநல பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள், உடல்நல குறைபாடு உள்ளவர்கள், உயர்த்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
என்னென்ன செய்யக்கூடாது
l மதியம் 12:00 மணி முதல் 3:00 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கவும்
l பிற்பகலில் கடுமையான வெளிப்புற செயல்பாடுகளை மேற்கொள்ளக்கூடாது
l செருப்பு இல்லாமல் வெளியே செல்லும் பழக்கத்தை தவிர்க்கவும்
l ஆல்கஹால், அதிக சர்க்கரை கொண்ட பானங்கள் அருந்துவதை தவிர்க்கவும்
l அதிக புரதம், பழமைான உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டும்
l நிறுத்தப்படும் வாகனங்களில் குழந்தைகளையோ, செல்லப் பிராணிகளையோ விடாதீர்கள்.

