5 நாட்களுக்கு மிக அடர்மூடுபனி வானிலை மையம் எச்சரிக்கை பஞ்சாபில் 3 போலீசார் உயிரிழப்பு
5 நாட்களுக்கு மிக அடர்மூடுபனி வானிலை மையம் எச்சரிக்கை பஞ்சாபில் 3 போலீசார் உயிரிழப்பு
ADDED : ஜன 18, 2024 02:09 AM

புதுடில்லி:தலைநகர் டில்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகாண்ட், ஜம்மு- -காஷ்மீர் உட்பட வடமாநிலங்களை அடர்ந்த பனிமூட்டம் சூழ்ந்துள்ளது. அதேபோல், மேற்கு வங்கத்திலும் மூடுபனி சூழ்ந்துள்ளது.
தலைநகர் டில்லியில் தொடர்ந்து ஏழாவது நாளாக கடுங்குளிர் நிலவுகிறது. இங்கு வெப்பநிலை நேற்று 3.5 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. இது, இயல்பை விட நான்கு டிகிரி குறைவு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், அடர்ந்த பனிமூட்டம் காரணமாக வடமாநிலங்களில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும் சம்பவங்களும் தினமும் நடக்கின்றன.
பஞ்சாபில் ஏற்பட்ட விபத்தில், மூன்று போலீஸ்காரர்கள் உயிரிழந்தனர். அடுத்த ஐந்து நாட்களுக்கு வடக்கு மற்றும் வடமேற்கு மாநிலங்களில் மிகவும் அடர்த்தியான பனிமூட்டமும், கடுங்குளிரும் நிலவும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
டில்லியில் நேற்று அதிகாலை முதலே மூடுபனி சூழ்ந்திருந்தது. புறநகர் பகுதிகளில் அதிகாலை 5:30 மணிக்கு அடர்ந்த பனிமூட்டம் நிலவியது. சப்தர்ஜங் மற்றும் சர்வதேச விமான நிலையம் ஆகிய இடங்களில் அதிகாலை 5:30 மணிக்கு பார்வைத் திறன் 200 மீட்டராக பதிவாகி இருந்தது.
அடர் பனிமூட்டம் காரணமாக அண்டை மாநிலங்களில் இருந்து 20 ரயில்கள் ஆறு மணி நேரம் தாமதமாக டில்லியை வந்தடைந்தன.
நேற்று காலை 9:00 மணிக்கு காற்றில் ஈரப்பதம் 91 சதவீதமாகவும், காற்றின் தரக் குறியீடு 373 ஆகவும் பதிவாகி இருந்தன. இது மிகவும் மோசமான நிலை என மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதுவே, நேற்று முன் தினம் மாலை 4:00 மணிக்கு 371 ஆக இருந்தது.
பஞ்சாப், ஹரியானா
அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவிலும் கடுங்குளிர் நிலவுகிறது. இரு மாநிலங்களிலும் நேற்று குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட குறைவாகவே இருந்தது.
பஞ்சாபின் பலோவல் சவுங்க்ரி நகரில் நேற்று வெப்பநிலை பூஜ்ஜியம் டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது.
அமிர்தசரஸ் - 2, லூதியானா - 2.8, பாட்டியாலா - 4.5, பதான்கோட் - 4.9, பதிண்டா - 3.4, பரித்கோட் - 2.5, குர்தாஸ்பூர் - 5, சண்டிகர் - 4.9 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது.
ஹரியானாவின் கர்னால் நகரில் நேற்று கடுங்குளிர் நிலவியது. இங்கு நேற்று இயல்பை விட 3 டிகிரி குறைவாக 3.4 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது.
அம்பாலா - 4.9, ஹிசார் - 5.8, நர்னால் - 3.5, ரோஹ்தக் - 6.4, பிவானி - 3.5, சிர்சா - 5.6 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது.
ராஜஸ்தான்
ராஜஸ்தானின் சில இடங்களில் நேற்று, குறைந்தபட்ச வெப்பநிலை சற்று உயர்ந்தது. அல்வார் நகரம் நேற்று குறைந்தபட்ச வெப்பநிலை 4.5 டிகிரி செல்ஷியசுடன் மிகக் குளிரான இடமாக இருந்தது.
நேற்று காலை 8:30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில், கங்காநகர் - 5.5, பிலானி - 5.6, சங்கரியா - 5.8, சிரோஹி - 6.2, ஜெய்ப்பூர் - 6.4 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது. மாநிலம் முழுதுமே பரவலாக அடர்ந்த பனி நிலவியது. சில இடங்களில் கடுங்குளிர் நிலவியது.
கிழக்கு திசை காற்றின் தாக்கம் காரணமாக அடுத்த ஓரிரு நாட்களுக்கு மாநிலத்தின் கிழக்கு, வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அடர்ந்த பனிமூட்டம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அதேநேரத்தில், ஷேகாவதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸுக்கும் கீழே சரிய வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஜம்மு - காஷ்மீர்
காஷ்மீரில் இரவு நேர வெப்பநிலை லேசாக உயருகிறது. ஸ்ரீநகரில் நேற்று முன் தினம் இரவு குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 2.4 டிகிரி செல்ஷியஸ் பதிவானது. இதுவே, 15ம் தேதி இரவு மைனஸ் 4.6 டிகிரி செல்ஷியஸாக இருந்தது.
வடக்கு காஷ்மீரின் குல்மார்க் - மைனஸ் 3.2, காசிகுண்ட் மைனஸ் 3.6, தெற்கு காஷ்மீரின் பஹல்காம் - மைனஸ் 3.9, கோகர்நாக் - மைனஸ் 1.1, குப்வாரா - மைனஸ் 4.3 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது.
ஐந்து நாட்கள்
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
வட இந்தியாவில், இந்தோ- - கங்கை சமவெளிகளில் நேற்று அதிகாலையில் இருந்தே அடர்ந்த மூடுபனி நிலவியது. பீஹார், கிழக்கு உத்தரப் பிரதேசம், வடக்கு மத்தியப் பிரதேசம் மற்றும் தலைநகர் டில்லியில் பனிமூட்டம் குறைந்துள்ளதாக செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.
ஆனால் பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அடர்ந்த பனிமூட்டம் தொடர்ந்து நிலவுகிறது.
நேற்று காலை 5:30 மணிக்கு பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலா, அம்பாலா மற்றும் உ.பி.,யின் பரேலி ஆகிய இடங்களில் 25 மீட்டரும், ஹரியானாவின் ஹிசார், சுரு மற்றும் பஹ்ரைச் ஆகிய இடங்களில் 50 மீட்டரும், உ.பி.,யில் லக்னோ மற்றும் பூர்னியாவில் 200 மீட்டரும் பார்வைத் திறன் பதிவாகி இருந்தன.
அடுத்த ஐந்து நாட்களுக்கு வடக்கு மற்றும் வடமேற்கு மாநிலங்களில் அடர்த்தியான முதல் மிக அடர்த்தியான மூடுபனி மற்றும் கடுங்குளிர் நிலவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.