ADDED : டிச 01, 2024 06:19 AM

பெங்களூரு: 'வங்கக்கடலில் உருவான, 'பெஞ்சல்' புயல் காரணமாக, கர்நாடகாவில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு கன மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கர்நாடக மாநில வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தெற்கு வங்கக்கடலில் கடந்த 25ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வளி மண்டல அடுக்குகளில் ஏற்பட்ட காற்று முறிவு காரணமாக, புயலாக வலுவடைவதில் தாமதம் ஏற்பட்டது. காற்று முறிவு பாதிப்புகள் நேற்று முன்தினம் காலை முதல் சீரடைய துவங்கின.
இதையடுத்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் 'பெஞ்சல்' புயல் உருவாகி உள்ளது. எனவே, மாநிலத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு கோலார், சிக்கபல்லாபூர், பெங்களூரு ரூரல், ராம்நகரில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.
தெற்கு உள் மாவட்டங்களான துமகூரு, சாம்ராஜ்நகர் உட்பட மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும். அதேவேளையில், கடலோர மாவட்டங்கள், வடக்கு உள் மாவட்டங்களில் வறண்ட காற்று வீசும்.
வடக்கு உள் மாவட்டங்களில் வழக்கத்தை விட, 2 அல்லது 3 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் குறையும். ஆனால் பெங்களூரில் பெரும்பாலும் மேகமூட்டமாக காணப்படும். பெங்களூரில் அதிகபட்சமாக 25 டிகிரி செல்ஷியசும், குறைந்தபட்சம் 18 டிகிரி செல்ஷியசும் வெப்பம் பதிவாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

