அசாம், அருணாச்சலில் கனமழை 20க்கும் மேற்பட்டோர் பலியான சோகம்
அசாம், அருணாச்சலில் கனமழை 20க்கும் மேற்பட்டோர் பலியான சோகம்
ADDED : ஜூன் 03, 2025 03:28 AM

குவஹாத்தி: வடகிழக்கு மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வரும் நிலையில், அசாம், அருணாச்சல பிரதேசத்தில், மழைக்கு 20க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஏராளமானவர்கள் வீடுகள், உடைமைகள் இழந்து தவிக்கின்றனர்.
அசாம், அருணாச்சலபிரதேசம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில், கடந்த ஒரு வாரமாகவே மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதில் அசாம், அருணாச்சலப் பிரதேசம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.
அசாமில், மழை வெள்ளத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 15 மாவட்டங்களில் 4 லட்சம் பேர் வெள்ளத்தில் சிக்கித் தவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 764 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. 4,000 ஹெக்டேர் விளைநிலங்கள் நாசமாகி உள்ளன.
மாநிலம் முழுதும் பல மாவட்டங்களில் சாலைகள், பாலங்கள் மற்றும் பிற உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. பிரம்மபுத்திரா, பராக், குஷியாரா உள்ளிட்ட நதிகள் அபாய அளவைத் தாண்டி பாய்கின்றன.
நிலைமை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதால், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலவரத்தை விவரித்தார்.
இதேபோன்று அருணாச்சல பிரதேசத்திலும், நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
அங்கு, 23 மாவட்டங்களில் உள்ள 156 கிராமங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர் மழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. புரி-திஹிங் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால், மகாந்தோங் பாலத்தின் பாதி அடித்துச்செல்லப்பட்டது.
இதனால் மியாவோ மற்றும் போர்டும்சா இடையேயான முக்கிய சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டது.
பல்வேறு மாவட்டங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, வெள்ளத்தில் சிக்கியிருப்பவர்கள் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர். நிலச்சரிவில் சிக்கி புதையுண்டவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.