கேரளாவில் பெய்யும் கனமழைக்கு 5 பேர் பலி; 10 மீனவர்கள் மாயம்
கேரளாவில் பெய்யும் கனமழைக்கு 5 பேர் பலி; 10 மீனவர்கள் மாயம்
ADDED : மே 31, 2025 10:14 AM

திருவனந்தபுரம்: கேரளாவில் கனமழை தீவிரமடைந்துள்ள நிலையில், 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், மாயமான மீனவர்கள் 10 பேரை மீட்புக்குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பேய் மழை பெய்து வருகிறது. மேலும், பல மாவட்டங்களுக்கு தொடர்ந்து அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டு வருகிறது.
கொல்லம், கோட்டயம், இடுக்கிய ஆகிய மாவட்டங்களில் இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகளில் வசிக்கக் கூடிய 1,894 பேரை 66 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் கேரளாவுக்கு விரைந்துள்ளனர்.
மலப்புரம், காசர்கோடு, பாலக்காடு, ஆலப்புழா ஆகிய பகுதிகளில் கனமழை மற்றும் சூறைக்காற்றினால், குடியிருப்புகள் சேதம் அடைந்துள்ளன. 500க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. மூவாட்டுப்புழா ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை அளவை தாண்டி வெள்ளம் பாய்ந்தோடி வருகிறது.
இந்த நிலையில், கேரளாவில் கனமழை காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், விழிஞ்சம் பகுதியில் இருந்து 3 படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 10 மீனவர்கள் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. புல்லுவிலா பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் மீனவர் ஒருவர் உயிரிழந்தார்.
அதேபோல, வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோரம், திரிபுரா, சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது. திரிபுராவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 25 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.