ஹிந்துக்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாத முதல்வருக்கு மதச்சார்பின்மை பற்றி பேச தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்
ஹிந்துக்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாத முதல்வருக்கு மதச்சார்பின்மை பற்றி பேச தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்
UPDATED : டிச 22, 2025 07:32 AM
ADDED : டிச 22, 2025 04:12 AM

திருநெல்வேலி: ஹிந்துக்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாத முதல்வர் ஸ்டாலினுக்கு மதச்சார்பின்மை குறித்து பேச தகுதியில்லை என திருநெல்வேலியில் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக சாடினார்.
திருநெல்வேலியில் நடந்த அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதற்கு பதிலளிக்கும் விதமாக நேற்று நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி : கிறிஸ்துமஸ் விழாக்களில் பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளிக்கு வாழ்த்து சொல்லக்கூட மனம் இல்லை. அனைத்து மதத்தினரையும் சமமாகக் கருதாத ஒருவருக்கு மதச்சார்பின்மை பேச தார்மீக உரிமை இல்லை.
எதிர்க்கட்சியாக இருந்தபோது 100 நாள் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என வாக்குறுதி அளித்த தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின் திட்டத்தை முறையாக செயல்படுத்தத் தவறியுள்ளது. இத்திட்டத்தில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு மாநில அரசே காரணம். பிரதமர் மோடி இத்திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தியுள்ளார்.
அறுவடை, நாற்று நடுதல் போன்ற விவசாயக் காலங்களில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கவும், விவசாயப் பணிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையிலும் இத்திட்டத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆதிச்சநல்லூரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்கனவே ஆய்வு மேற்கொண்டு பல திட்டங்களை முன்னெடுத்துள்ளார். தமிழர்களின் கலாசாரத்தை பிரதமர் மோடி உலக அளவில் கொண்டு சென்றுள்ளார். காசி மற்றும் குஜராத்தில் தமிழ் சங்கமம், 63 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு, ஐ.நா., சபை வரை 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழக்கம் போன்றவை அதற்கு சான்றாகும்.
கடந்த 11 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மட்டும் சாலைகள், பாலங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகளுக்காக ரூ.14 லட்சம் கோடி மத்திய அரசு வழங்கியுள்ளது.
திருநெல்வேலியில் திறக்கப்பட்ட ரூ.150 கோடி மதிப்பிலான மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மத்திய அரசின் பி.எம்.எஸ்.எஸ்.ஒய்., திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது. இதில் பெரும்பங்கு மத்திய அரசின் நிதி. அதேபோல் கிரிட்டிக்கல் கேர் சென்டரும் மத்திய அரசின் திட்டம். மத்திய அரசு கட்டிய திட்டங்களுக்கு மாநில அரசு ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறது.
ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் உணவுப்பொருட்களுக்கும் மாநில அரசு தன் பெயரில் ஸ்டிக்கர் ஒட்டுகிறது. இது தி.மு.க., அரசின் வழக்கமான நடைமுறை. இந்த 'ஸ்டிக்கர் ஒட்டும் அரசு' விரைவில் முடிவுக்கு வரும். 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., ஆட்சி அகற்றப்பட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்றார்.

