மூணாறில் கடும் போக்குவரத்து நெரிசல்; இ -பாஸ் நடைமுறைபடுத்த எதிர்பார்ப்பு
மூணாறில் கடும் போக்குவரத்து நெரிசல்; இ -பாஸ் நடைமுறைபடுத்த எதிர்பார்ப்பு
ADDED : அக் 02, 2025 11:59 PM

மூணாறு: மூணாறில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் இ - பாஸ் முறையை நடைமுறை படுத்த வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்தது.
மூணாறு நகர், சுற்றியுள்ள சுற்றுலா பகுதிகளில் வாரம், பண்டிகை ஆகிய விடுமுறை நாட்கள், சுற்றுலா சீசன் நேரம் ஆகியவற்றின்போது பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்படும். அதனை கட்டுப்படுத்துவதற்கு மாற்று வழிகளை அதிகாரிகள் கையாளுவது இல்லை என்பதால் நெரிசல் தொடர் கதையாகி வருகின்றது.
அதிகரிப்பு: தற்போது ஆயுத பூஜை தொடர் விடுமுறை என்பதால் வழக்கத்தை விட நெரிசல் அதிகரித்து சுற்றுலா பகுதிகளில் பல கி.மீ., தூரம் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. அதனால் வாகனங்கள் ஊர்ந்து செல்ல நேரிட்டதால் பயணிகள், பொதுமக்கள் ஆகியோர் கடுமையாக அவதியுற்றனர்.
இ- பாஸ்: நூற்றுக்கணக்கில் சுற்றுலா வாகனங்கள் வருவதால் போக்குவரத்து நெரிசல் பல ஆண்டுகளாக தொடர்கிறது. அதில் ஆம்புலன்ஸ் வாகனம், அவசர தேவைக்கு செல்வோர் உள்பட பல தரப்பு மக்கள் சிக்கி கடும் சிரமப்பட்டு வருகின்றனர். பயணிகள் திட்டமிட்டபடி பயணத்தை தொடர இயலாமல் திண்டாடுகின்றனர்.
சமீபத்தில் ஊட்டி, கொடைக்கானல் ஆகிய சுற்றுலா பகுதிகளில் பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் இ - பாஸ் முறை நடைமுறைபடுத்தப்பட்டது.
வால்பாறையில் நவ. ஒன்று முதல் இ-பாஸ் முறை நடை முறைபடுத்தப்படுகிறது. அது போன்று மூணாறில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் இ-பாஸ் முறையை நடைமுறைபடுத்த வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற் பட்டுள்ளது.