விளையாட்டு மைதானத்தில் நிறுத்தப்படும் ஹெலிகாப்டரால் போட்டிகள் ஒத்திவைப்பு
விளையாட்டு மைதானத்தில் நிறுத்தப்படும் ஹெலிகாப்டரால் போட்டிகள் ஒத்திவைப்பு
UPDATED : அக் 09, 2026 03:38 PM
ADDED : அக் 09, 2026 03:36 PM
புதுடில்லி: குருகிராமில் உள்ள டாவ் தேவி லால் மைதானத்தில், வி.ஐ.பி.,யின் ஹெலிகாப்டர் நிறுத்தி வைக்கப்பட்டதால், வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் மூன்று நாட்கள் ஒத்திவைக்கப்பட்டன.
குருகிராமில் உள்ள டாவ் தேவி லால் விளையாட்டு மைதானத்தை, பல்வேறு விளையாட்டு வீரர்கள் பயிற்சிக்காகவும், போட்டிகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். இங்குள்ள மைதானம் பரந்து விரிந்து இருப்பதால், அவ்வப்போது, ஹெலிகாப்டர் நிறுத்தி வைக்கும் இடமாகவும் பயன்படுத்தப்படுகிறது.
சமீபத்தில், ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனிக்கு சொந்தமான ஹெலிகாப்டர் அங்கு தரையிறக்கப்பட்டு, நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. ஹெலிகாப்டரின் பாதுகாப்பு காரணங்களுக்காக, மைதானத்தின் ஓடுதளம் மூடப்பட்டது.
இந்நிலையில், டாவ் தேவி லால் மைதானத்தில், மாவட்ட கல்வித்துறை சார்பில், வட்டார அளவிலான பள்ளி விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், மைதானத்தில் ஹெலிகாப்டர் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததால், விளையாட்டுப் போட்டிகள் தொடர்ந்து மூன்று நாட்களாக ஒத்தி வைக்கப்பட்டன.
கடந்த 7 ம் தேதி, மைதானத்தில் இருந்து ஹெலிகாப்டர் எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நேற்று முன் தினம் முதல், வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கின.
இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து பல்வேறு வி.ஐ.பி.,க்களை ஏற்றி வந்த ஹெலிகாப்டர்கள், டாவ் தேவிலால் விளையாட்டு மைதானத்தில் 20க்கும் மேற்பட்ட முறை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இவ்வாறு தரையிறக்கப்படும் ஹெலிகாப்டர்கள், குறைந்தது இரண்டு – மூன்று நாட்கள் அங்கு நிறுத்திவைக்கப்பட்டு இருப்பது வழக்கமாக தொடர்கிறது. இதனால், விளையாட்டு வீரர்களின் பயிற்சி மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
