உத்தராகண்டில் மேலும் 287 பேர் மீட்பு: நிவாரண பணியில் ஹெலிகாப்டர்கள்
உத்தராகண்டில் மேலும் 287 பேர் மீட்பு: நிவாரண பணியில் ஹெலிகாப்டர்கள்
ADDED : ஆக 10, 2025 12:36 AM

உத்தரகாசி: உத்தராகண்டில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கியிருந்த மேலும் 287 பேர் ஹெலிகாப்டர்கள் வாயிலாக நேற்று மீட்கப்பட்டனர்.
உத்தராகண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலி கிராமத்தில், கடந்த 5ம் தேதி, மேகவெடிப்பு காரணமாக, குறைந்த நேரத்தில் அதிதீவிர மழை பெய்தது.
பெருவெள்ளம் கீர் கங்கா நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த கனமழையால், மலை உச்சியில் இருந்து சகதியுடன் பெருவெள்ளம் பெருக்கெடுத்தது. இதில், மலைப்பகுதிகளில் இருந்த வீடுகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட கட்டடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
மலைப்பாதைகளில் ஒருசில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டன.
இங்கு, ஐந்தாவது நாளாக நேற்று நடந்த மீட்புப் பணியில், 287 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மீட்புப் பணியில் உத்தராகண்ட் சிவில் விமான போக்குவரத்து ஆணையத்துக்கு சொந்தமான நான்கு ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன.
மீட்கப்பட்டவர்களில், 170 பேர் மாட்லி நகர விமான தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மீதமிருந்த 117 பேர், சின்யாலிசவுர் விமான தளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மீட்கப்பட்டவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக உத்தரகாசி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்ததாக கூறிய அதிகாரிகள், அப்பகுதியில் இருந்து 1,000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டதாக தெரிவித்தனர். மாயமான ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 50 பேரை தேடும் பணி தொடர்கிறது.
ரூ.5 லட்சம் தாராலி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், மின்சாரம் தடைபட்டுள்ள நிலையில், நிவாரண முகாம்களுக்கு, தற்காலிகமாக மின்சாரம் வழங்குவதற்கான ஜெனரேட்டர்கள் ஹெலிகாப்டர் வாயிலாக அனுப்பி வைக்கப்பட்டன.
கங்னானிக்கு அருகில் உள்ள லிம்சிகாட்டில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெய்லி பாலத்தை கட்டும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். அது, அடுத்த 24 மணி நேரத்தில் பயன்பாட்டுக்கு வரும் வகையில், இரவு பகலாக வீரர்கள் பணி செய்து வருகின்றனர்.
தாராலி பேரழிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், வீடுகளை இழந்தவர்களுக்கும் தலா 5 லட்சம் ரூபாய் உடனடி நிவாரணமாக வழங்கப்படும் என, முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார்.
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு, மறுமலர்ச்சி மற்றும் நிலையான வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதற்காக மூன்று பேர் கொண்ட குழுவையும் அவர் அறிவித்தார்.
வருவாய் செயலர் தலைமையிலான இந்த குழு, முதற்கட்ட அறிக்கையை அரசிடம் ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்கும்.