கற்பழிப்பு வழக்கில் மலையாள நடிகர் எடவெலா பாபு கைது
கற்பழிப்பு வழக்கில் மலையாள நடிகர் எடவெலா பாபு கைது
ADDED : செப் 25, 2024 03:48 PM

கொச்சி: மலையாள நடிகர் எடவெலா பாபு, கற்பழிப்பு வழக்கில் கைதாகி, பின்னர் ஜாமினில் வெளியே வந்தார்.
மலையாள திரை உலகில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக விசாரித்த நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை கடந்த மாதம் வெளியானது. இதைத்தொடர்ந்து நடிகைகள் பலரும், தாங்கள் எவ்வாறு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டோம் என வெளிப்படையாக கூறி வருகின்றனர்.
அதன் அடிப்படையில் வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன.இதன்படி புகாருக்கு ஆளான நடிகர் எடவெலா பாபு மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இவர் மலையாள திரைப்பட உலகில், 1982 முதல் நடித்து வருகிறார். 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
கொச்சியை சேர்ந்த நடிகை கூறியிருந்த கற்பழிப்பு புகார் அடிப்படையில் பாபு மீது ஐபிசி பிரிவு 354( பாலியல் தொந்தரவு) 376 பிரிவு (கற்பழிப்பு) மற்றும் 509 பிரிவு(பெண்களை இழிவாக பேசுவது) ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டது. போலீசார் இன்று அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
கொச்சி கடலோர போலீஸ் தலைமையகத்தில்,3 மணி நேர நீண்ட விசாரணைக்கு பின் அவருக்கு ஜாமின் கிடைத்தது. இவர், முன் ஜாமின் பெற்றிருந்ததால் அவர் வெளிவந்துள்ளார்.
விரைவில், பாபுவுக்கு எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனை நடத்தப்பட இருக்கிறது.
பாபு மீது புகார் அளித்த நடிகையே, நடிகர் முகேஷ், ஜெயசூர்யா, மணியன்பில்ல ராஜூ, வக்கீல் சந்திரசேகரன் மற்றும் படத்தயாரிப்பாளர்கள் நோபிள் மற்றம் விச்சு ஆகியோர் மீது வழக்கு தொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இதேபோன்ற பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கொல்லம் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ.,வும் நடிகருமான முகேஷ், கைதாகி ஜாமினில் வெளியே வந்தார்.