விசாரணைக்கு உச்சநீதிமன்றம் "நோ": ஜாமின் கோரிய மனுவை திரும்ப பெற்றார் சோரன்
விசாரணைக்கு உச்சநீதிமன்றம் "நோ": ஜாமின் கோரிய மனுவை திரும்ப பெற்றார் சோரன்
UPDATED : மே 22, 2024 01:44 PM
ADDED : மே 22, 2024 01:37 PM

புதுடில்லி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் இடைக்கால ஜாமின் கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் மறுத்ததை அடுத்து, அவர் ஜாமின் மனுவை திரும்பப் பெற்றார்.
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், ஜன., 31ல் கைது செய்யப்பட்டார். நிலமோசடி தொடர்பான வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதை அடுத்து, முதல்வர் பதவியில் இருந்து அவர் விலகினார்.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை, ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம், கடந்த சில தினங்களுக்கு முன் நிராகரித்தது. இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஹேமந்த் சோரன் இடைக்கால ஜாமின் கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றம் மறுத்ததை அடுத்து ஜாமின் மனுவை ஹேமந்த் சோரன் திரும்பப் பெற்றார். தேர்தல் பிரசாரம் செய்ய, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது போல், சோரனுக்கும் ஜாமின் கிடைக்கும் என அவரது தரப்பினர் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

