அமலாக்கத்துறை பிடியில் ஹேமந்த் சோரன், லாலு பிரசாத்: 'இண்டியா' கூட்டணியின் நீங்கா தலைவலி
அமலாக்கத்துறை பிடியில் ஹேமந்த் சோரன், லாலு பிரசாத்: 'இண்டியா' கூட்டணியின் நீங்கா தலைவலி
UPDATED : ஜன 29, 2024 11:21 AM
ADDED : ஜன 29, 2024 11:20 AM

புதுடில்லி: வெவ்வேறு வழக்குகளில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் ஆகியோர் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகினர். இண்டியா கூட்டணி கட்சிகளின் பல தலைவர்கள் அமலாக்கத்துறை விசாரணை பிடியில் இருப்பது அக்கூட்டணிக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து 'இண்டியா' என்ற கூட்டணியை உருவாக்கின. அப்போதிருந்து அதில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. மேற்குவங்கத்தில் நாங்கள் தனித்தே போட்டியிடுவோம் என அம்மாநில முதல்வர் மம்தா கூறினார்; இதனைத்தொடர்ந்து பஞ்சாபிலும் காங்கிரசுடன் கூட்டணி இல்லாமல் தனியாக போட்டியிடுவதாக அங்கு ஆளும் ஆம்ஆத்மி கட்சி அறிவித்தது.
இண்டியா கூட்டணியில் இடம்பெற்றாலும் அந்தந்த மாநிலங்களில் கட்சிகள், கூட்டணிக்கு இடம்கொடுக்காமல் போட்டியிட முடிவு செய்வதால் அனைத்து கட்சிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளன. அதற்கு அடுத்ததாக பீஹாரில் நிதீஷ்குமார், இண்டியா கூட்டணியில் இருந்து வெளியேறி பா.ஜ., ஆதரவுடன் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார். இது அம்மாநிலத்தில் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையே கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில கட்சி தலைவர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி வருகிறது.
ஹேமந்த் சோரன்
இதில் ஜார்க்கண்ட் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா தலைவருமான ஹேமந்த் சோரன் மீது நில மோசடி தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனைக் குற்றச்சாட்டு உள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்துவதற்காக 7 முறை சம்மன் அனுப்பியும் அதனை புறக்கணித்தார். பின்னர் கடந்த ஜன.,20ல் ஆஜரான ஹேமந்த், மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இதற்காக நேற்று (ஜன.,28) டில்லி சென்றார் ஹேமந்த். அவரின் இல்லத்திற்கு இன்று சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.லாலு பிரசாத்
அதேபோல், பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ரயில்வே துறையில் வேலை வழங்க, லாலுவும் அவரது குடும்பத்தினரும் வேலைக்கு விண்ணப்பித்தவர்களிடமிருந்து நிலங்களை மிக குறைந்த விலையில் லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கில் லாலு உள்ளிட்ட அவரது குடும்பத்தார் அமலாக்கத்துறையின் பிடியில் உள்ளனர்.
இது தொடர்பான வழக்கில் பாட்னாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று லாலு பிரசாத் மற்றும் அவரது மகள் மிஸா உடன் ஆஜரானார். இது மட்டுமல்லாமல் டில்லி முதல்வரும் ஆம்ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் அமலாக்கத்துறை தொடர்ந்து சம்மன் அனுப்பி வருகிறது. ஆனால் அவர் ஆஜராகாமல் புறக்கணித்து வருகிறார். இப்படி வரிசையாக இண்டியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அமலாக்கத்துறை விசாரணையில் சிக்கியுள்ளதால், இண்டியா கூட்டணி தலைவர்களுக்கு தலை வலியை ஏற்படுத்தி உள்ளது.