ஜார்க்கண்ட் முதல்வராக 28ம் தேதி பதவி ஏற்கிறார் ஹேமந்த் சோரன்
ஜார்க்கண்ட் முதல்வராக 28ம் தேதி பதவி ஏற்கிறார் ஹேமந்த் சோரன்
ADDED : நவ 24, 2024 11:39 PM

ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில், 'இண்டி' கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் வரும் 28ல் முதல்வராக பதவியேற்கிறார்.
ஜார்க்கண்டில் உள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல், கடந்த 20 மற்றும் 23ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடந்தது.
இதில், பதிவான ஓட்டுகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன.
இதில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34 இடங்களையும், காங்கிரஸ் 16 இடங்களையும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் நான்கு இடங்களிலும் வென்றது.
கூட்டணியில் இடம்பெற்ற சி.பி.ஐ., - எம்.எல்., இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது.
பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவை என்ற நிலையில், இண்டி கூட்டணி 56 தொகுதிகளை கைப்பற்றியது.
எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ., 21 தொகுதிகளில் வென்றது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததை அடுத்து, முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சோரன், கவர்னர் சந்தோஷ் காங்வாரை சந்தித்து அது தொடர்பான கடிதத்தை நேற்று அளித்தார். அப்போது, ஆட்சி அமைக்கவும் அவர் உரிமை கோரினார்.
கவர்னரின் ஒப்புதலை அடுத்து, ஜார்க்கண்டில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் சோரன், வரும் 28ம் தேதி பதவியேற்க உள்ளார்.
அவரின் அமைச்சரவையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினருடன், காங்கிரசை சேர்ந்த ஆறு பேரும், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த நான்கு பேரும் இடம்பெற உள்ளதாக சொல்லப்படுகிறது.
பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.