ADDED : டிச 23, 2024 08:21 AM
குவஹாத்தி: அசாமில், 20 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருள் கடத்திய நபரை, அதிரடிப்படை போலீசார் கைது செய்தனர்.
வடகிழக்கு மாநிலமான அசாமின் கச்சார் மாவட்டத்தில், சிலிகுரி சாலையில் போதைப் பொருள் கடத்தி செல்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிறப்பு அதிரடிப்படை போலீஸ் ஐ.ஜி., பார்த்தசாரதி கண்காணிப்பில் நேற்று அதிகாலை அந்த பகுதியில் அதிரடி படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை மடக்கி சோதனையிட்டனர். அதில், 6,000 யாபா போதை மாத்திரைகள் மற்றும் 125 கிராம் ஹெராயின் இருந்தது தெரிய வந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட சஹில் அகமது லஷ்கர் என்பவரை கைது செய்தனர்.
''பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் சந்தை மதிப்பு 20 கோடி ரூபாய்,'' என ஐ.ஜி., பார்த்தசாரதி தெரிவித்தார்.

