சாலை பள்ளங்களை மூடும் விழிப்புணர்வு ஹெஸ்காம் பெண் ஊழியரின் விடாமுயற்சி
சாலை பள்ளங்களை மூடும் விழிப்புணர்வு ஹெஸ்காம் பெண் ஊழியரின் விடாமுயற்சி
ADDED : மார் 09, 2024 10:58 PM

கர்நாடகாவின் வடமாவட்டமான ஹூப்பள்ளியின் வித்யுத் நகரில் வசிப்பவர் மஹாலட்சுமி ஹிரேமத், 51. ஹெஸ்காமில் ஊழியராக வேலை செய்கிறார். யாருடைய உதவியும் இன்றி, சாலைப் பள்ளங்களை தனி ஆளாக மூடி வருகிறார்.
இதுபற்றி மஹாலட்சுமி ஹிரேமத் கூறியதாவது:
ஹெஸ்காமில் 20 ஆண்டுகளாக வேலை செய்கிறேன். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, ஹூப்பள்ளி பஞ்சாரா காலனியில், என் ஸ்கூட்டரில் சென்றேன்.
எனக்கு முன்னாள் பைக்கில் வேகமாக சென்ற, ஒரு வாலிபர் சாலை பள்ளத்தால் விபத்தில் சிக்கினார். அதிர்ஷ்டவசமாக கை, கால்களில் சிராய்ப்பு காயத்துடன் தப்பினார்.
அதே இடத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள், பலர் விபத்தில் சிக்கினர். ஆனால் யாருக்கும் அந்த பள்ளத்தை மூட வேண்டும் என்று, தோன்றவே இல்லை. எனக்கு தோன்றியது. அந்த பள்ளத்தால் எந்த உயிரும், பறிபோகக் கூடாது என்று நினைத்தேன். வீட்டிற்கு சென்று மண்வெட்டி, மண் சுமக்கும் சட்டியை எடுத்து வந்து, அந்த பள்ளத்தை மூடினேன். அதன்பின்னர் எங்கு பள்ளத்தை பார்த்தாலும் மூட வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டேன்.
பள்ளத்தை மூடுவதற்காக நான் யாரையும், உதவிக்கு அழைப்பது இல்லை. நானே தனியாக சென்று மூடி விடுவேன். ஹுப்பள்ளி - தார்வாட் இரட்டை மாநகரம். இங்கு பல பிரச்னைகள் உள்ளன. இதனால் சாலைப் பள்ளத்தை மூடுவதில், அதிகாரிகள் கவனம் செலுத்தாமல் இருக்கலாம். ஆனால் சாலைப் பள்ளத்தால் ஏற்படும் விபத்துகளின் விளைவு தீவிரமானது.
சாலைப் பள்ளங்களை மூட வேண்டும் என்று, குழந்தைகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன். நான் செய்யும் பணியை, சமூக சேவை என்று நான் சொல்வது இல்லை. பிறருக்கு உதவும் குணம் மனிதர்களிடம் இருக்க வேண்டும்.
சாலைப் பள்ளங்களை கடந்து செல்லும், வாகன ஓட்டிகள், நாம் கவனமாக செல்ல வேண்டும் என்று மட்டும் நினைக்க கூடாது.
இன்னொரு வாகன ஓட்டிக்கு, எந்த பிரச்னையும் ஏற்படக் கூடாது என்று நினைத்தால், பள்ளங்களை மூட வேண்டும். இப்படி செய்தால் சாலைப் பள்ளங்களே இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

