ஜாமின் கொடுத்தும் விடுதலை தாமதம் கமிஷனருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
ஜாமின் கொடுத்தும் விடுதலை தாமதம் கமிஷனருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
ADDED : மார் 13, 2024 12:33 AM
புதுடில்லி,:சிறையில் இருந்து கைதிகளை விடுவிப்பதற்காக வழங்கப்படும் ஜாமின் பத்திரங்களை விரைவாக சரிபார்த்து, சிறை அதிகாரிகளுக்கு தரப்படுவதை உறுதி செய்ய, டில்லி மாநகரப் போலீசுக்கு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஒருவர், டில்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார்.
அதை விசாரித்த நீதிபதி, 25,000 ரூபாய் ஜாமின் பத்திரம் மற்றும் அதே தொகைக்கு இருவர் ஜாமின் பத்திரம் அளித்து, ஒரு வாரத்துக்கு இடைக்கால ஜாமின் அளித்து பிப்., 14ல் உத்தரவிட்டார்.
இந்நிலையில், இடைக்கால ஜாமின் உத்தரவுப்படி சிறையில் இருந்து தன்னை வெளியே விட உத்தரவிட்மாறு மார்ச் 1ம் தேதி அதே நபர் மீண்டும் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதி அனுப் குமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர், 'பிப்., 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில்தான் ஜாமின்கள் மீதான சரிபார்ப்பு அறிக்கைகள் கிடைத்தன. அதனால்தான் தாமதம் ஏற்பட்டது. பிப். 29ம் தேதி ஜாமின் பத்திரங்கள் குறித்து, போன் வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டு, மார்ச் 1ம் தேதி, ஜாமினில் விடுவிக்கப்பட்டார்'என்றார்.
குற்றம் சாட்டப்பட்டோர், குற்றவாளிகள் அல்லது விசாரணைக் கைதிகளை ஜாமினில் விடுவிக்க தாமதம் ஏற்படுவது குறித்து கவலை தெரிவித்த நீதிபதி அனுப் குமார் பிறப்பித்த உத்தரவு:
இதுபோன்ற தாமதம் ஒருவரின் சுதந்திர உரிமையை பாதிக்கிறது. தேவையற்ற ஆட்சேபனைகளை எழுப்பாமல் சட்டப்படி விரைவாக ஜாமின் பத்திரங்களை பரிசீலிப்பது குறித்து சிறை கண்காணிப்பாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
நீதிமன்றங்கள் ஜாமின் உத்தரவு பிறப்பித்தால், தாமதம் இன்றி, விரைவாக அதை நடைமுறைப்படுத்துவதை அரசு கடமைப்பட்டுள்ளது.
ஜாமின் பத்திர சரிபார்ப்பு செயல்முறைக்கு குறைவான பணியாளர்கள் அல்லது காவல்துறை அதிகாரிகளின் அதிக வேலைப்பளு காரணமாக இருக்கலாம்.
ஆனால், அவற்றை விரைந்து பரிசீலித்து, கைதிகளை விரைந்து விடுவிப்பதை டில்லி மாநகரப் போலீஸ் கமிஷனர் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

