நிலத்தடி நீரில் அதிகளவில் யுரேனியம்: சத்தீஸ்கர் மக்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம்
நிலத்தடி நீரில் அதிகளவில் யுரேனியம்: சத்தீஸ்கர் மக்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம்
ADDED : அக் 23, 2024 06:08 AM

புதுடில்லி: சத்தீஸ்கரின் ஆறு மாவட்டங்களில், புற்றுநோய், சிறுநீரக கோளாறு, நுரையீரல் பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய அபாயகரமான அளவுக்கு, குடிநீரில் யுரேனியம் கலந்திருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது.
குடிநீரில் கலந்திருக்கும் யுரேனியம் அளவு, லிட்டருக்கு 15 மைக்ரோ கிராமுக்குள் இருப்பது பாதுகாப்பானது என, உலக சுகாதார நிறுவனம், 2017ல் தெரிவித்தது. இதற்கு மேல் அளவு கூடும்போது பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரித்து இருந்தது.
100 மைக்ரோ கிராம்
இந்தியா உள்ளிட்ட சில நாடுகள், 1 லிட்டர் குடிநீரில், 30 மைக்ரோ கிராம் அளவுக்கு யுரேனியம் கலந்திருப்பதை அனுமதிக்கின்றன. பாபா அணு ஆராய்ச்சி மையம் கடந்த ஜூன் மாதம் நடத்திய ஆய்வு முடிவில், 1 லிட்டர் குடிநீரில், 60 மைக்ரோ கிராம் அளவு வரை யுரேனியம் கலந்திருப்பது ஆபத்தை விளைவிக்காது என்று தெரிவித்தது.
இந்நிலையில், சத்தீஸ்கரின் துர்க், ராஜ்நந்தகாவ்ன், காங்கர், பெமேதரா, பலோட், கவர்தா மாவட்டங்களில் உள்ள கிராமங்களில், மக்கள் குடிக்க பயன்படுத்தும் கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து பரிசோதிக்கப்பட்டது. அதில், 1 லிட்டர் குடிநீரில் 100 மைக்ரோ கிராம் அளவுக்கு யுரேனியம் கலந்திருப்பது தெரியவந்தது. பலோட் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், 1 லிட்டர் நிலத்தடி நீரில் 130 மைக்ரோ கிராம் யுரேனியம் கலந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ஆறு கிராமங்களிலும், 1 லிட்டர் குடிநீரில் சராசரியாக 86 முதல் 105 மைக்ரோ கிராம் அளவுக்கு யுரேனியம் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகள், மாநில பொது சுகாதாரத் துறையிடம் அளிக்கப்பட்டு மறுபரிசோதனை செய்ததில், யுரேனியம் அளவு அபாயகரமான அளவை தாண்டி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
இந்த தண்ணீரை குடிப்பதால், புற்றுநோய், சிறுநீரக கோளாறு, நுரையீரல் மற்றும் தோல் பாதிப்புகள் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். நம் நாட்டில், நிலத்தடி நீரில் யுரேனியம் அளவு அதிகமாக காணப்படுவது இது முதல்முறை அல்ல. பஞ்சாப், ஹரியானா உட்பட 12 மாநிலங்களில், நிலத்தடி நீரில் யுரேனியம் அளவு அதிகம் காணப்படுவதாக மத்திய நிலத்தடி நீர் வாரியம் கடந்த ஜனவரியில் எச்சரித்தது. இதில், பஞ்சாப் மற்றும் ஹரியானா, நாட்டுக்கு தேவையான கோதுமையில், 50 சதவீதத்தை விளைவிப்பது குறிப்பிடத்தக்கது.
பீஹாரில் உள்ள ஒன்பது மாவட்டங்களில், குடிநீரில் யுரேனியம் அளவு அதிகம் இருப்பதாக, 2022 ஆகஸ்டில் தெரியவந்தது. கர்நாடகாவிலும் கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த நிலை கண்டறியப்பட்டுள்ளது.