போதைப்பொருள் விற்போர் மீது துப்பாக்கி சூடு உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் எச்சரிக்கை
போதைப்பொருள் விற்போர் மீது துப்பாக்கி சூடு உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் எச்சரிக்கை
ADDED : டிச 01, 2024 04:02 AM

மங்களூரு: ''போதைப்பொருட்கள் கடத்துவோர், விற்போர் தீவிரமாக கண்காணிக்கப்படுவர். தேவைப்பட்டால், அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படும்,'' என, மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மங்களூரில் நேற்று போலீஸ் குடியிருப்புகள், சுப்ரமணியா, பெல்லாரே ஆகிய போலீஸ் நிலையங்களுக்கான புதிய கட்டடங்களை உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
போதைப்பொருட்களை ஒழிக்கும் செயலை, மாநிலம் முழுவதும் மீண்டும் துவக்கி உள்ளோம். இதுதொடர்பாக, பல இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. போதைப்பொருள் அதிகம் புழங்கினால், சம்பந்தப்பட்ட பகுதிகளின் கமிஷனர் உட்பட உயர் போலீஸ் அதிகாரிகள் தான் பொறுப்பு.
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக, போதைப்பொருள் விற்பனை செய்வோர், வெளி மாநிலங்களில் இருந்து கிலோ கணக்கில் போதைப்பொருட்களை கடத்தி வருகின்றனர்.
பெங்களூரில் கடந்த ஆண்டில் மட்டும், 250 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடத்தலில் ஈடுபட்டிருந்த சில வெளிநாட்டவர், நாடு கடத்தப்பட்டுள்ளனர். பலர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
போதைப்பொருட்கள் கடத்துவோர், விற்போர் தீவிரமாக கண்காணிக்கப்படுவர். தேவைப்பட்டால், போதைப்பொருள் விற்போர், கடத்துவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படும். நக்சல் தலைவர் விக்ரம் கவுடா, என்கவுன்டர் செய்யப்பட்ட பின், அவரது கூட்டாளிகளை சரணடையுமாறு எச்சரித்துள்ளோம்.
விஸ்வ ஒக்கலிகர் மடாதிபதிர் குமார் சந்திரசேகர நாத சுவாமிகள் மீது வழக்கு தொடரப்பட்டதால், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என தெளிவாகிறது. அமைச்சரவை மாற்றம் குறித்து கட்சி மேலிடமே முடிவு எடுக்கும்.
ஹாசனில் சித்தராமையா ஆதரவாளர்கள் மாநாடு நடத்துவது குறித்து, பா.ஜ., தேவையற்ற குற்றசாட்டுகளை கூறுகிறது. இம்மாநாட்டை துமகூரில் நடத்த நான் விருப்பம் தெரிவித்தேன். ஆனால், துமகூரில் அரசு விழா நடக்க இருப்பதால், ஹாசனில் நடத்துகின்றனர்.
இவ்வாறு அவர்கூறினார்.