பஹல்காமில் பயங்கரவாதியை எதிர்த்து போராடிய குதிரை ஓட்டி வீரமரணம்
பஹல்காமில் பயங்கரவாதியை எதிர்த்து போராடிய குதிரை ஓட்டி வீரமரணம்
ADDED : ஏப் 23, 2025 02:13 PM

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதியை எதிர்த்து நின்று போராடி, பஹல்காம் தாக்குதலில் உயிரை மாய்த்துக் கொண்ட குதிரை சவாரி தொழில் செய்பவரின் வீரத்தை அனைவரும் போற்றி வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில், சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கர்நாடகா, ஐதராபாத் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்த நிலையில், அவர்களின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட இருக்கின்றன.
முழுக்க முழுக்க ஹிந்து மக்களை குறி வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், பஹல்காமில் சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்லும் குதிரை சவாரி தொழில் செய்து வரும் உள்ளூர்வாசியான சையத் அடில் ஹூசேன் ஷா என்பவரும் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இவர், சம்பவத்தன்று துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதிகளில் ஒருவனின் துப்பாக்கியை பறித்து, தாக்குதலை முறியடிக்க முயன்றுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக, பயங்கரவாதியின் துப்பாக்கிச்சூட்டில் குண்டடி பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
வயதான பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகளைக் கொண்ட அவரது குடும்பம், சையதுவின் வருமானத்தை நம்பியே பிழைப்பு நடத்தி வந்துள்ளனர். தற்போது, அவரது மரணம் குடும்பத்திற்கு பேரிழப்பாக மாறியுள்ளது.
இது குறித்து சையதுவின் தந்தை சையத் ஹைதர் ஷா கூறுகையில், 'பஹல்காமுக்கு நேற்று எனது மகன் வேலைக்கு சென்றார். சுமார் 3 மணியளவில் தாக்குதல் பற்றி தகவல் எங்களுககு வந்தது. உடனே என் மகனை தொடர்பு கொண்டோம். ஆனால், அவனது செல்போன் ஸ்விட்ஆப்பாகி இருந்தது.
4.40 மணிக்கு மீண்டும் அவனது செல்போன் ஆன் செய்யப்பட்டது. ஆனால், நாங்கள் பலமுறை தொடர்பு கொண்ட போதும், யாரும் பதிலளிக்கவில்லை. அதன்பிறகு தான் மகன் உயிரிழந்தது தெரிய வந்தது. இந்த சம்பவத்தை செய்தவர்கள் யாராக இருந்தாலும், இதற்கான விளைவுகளை சந்தித்தே ஆக வேண்டும்,' என்றார்.