கப்பன் பார்க்கில் நிகழ்ச்சி நடத்த தோட்டக்கலை துறை கட்டுப்பாடு
கப்பன் பார்க்கில் நிகழ்ச்சி நடத்த தோட்டக்கலை துறை கட்டுப்பாடு
ADDED : டிச 23, 2024 06:52 AM
பெங்களூரு: கப்பன் பார்க்கில் 20 பேருக்கு மேல் கூடி நிகழ்ச்சி நடத்துவதற்கு இனிமேல், தோட்டக் கலைத் துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பெங்களூரு நகரில் உள்ள முக்கிய பூங்காக்களில், கப்பன் பார்க்கும் ஒன்று. பசுமை போற்றிய இடமான இங்கு, ஏராளமான மரங்கள் உள்ளன. தினமும் இங்கு வந்து ஏராளமானோர் பொழுதுபோக்கி வருகின்றனர். காலை, மாலை நேரங்களில் பலர் நடைபயிற்சியில் ஈடுபடுகின்றனர். வார இறுதி நாட்களில் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட நிறைய பேர் வருவர்.
வார இறுதி நாட்களின் போது கப்பன் பார்க்கில், ஏதாவது ஒரு அமைப்புகள் சார்பில் நிகழ்ச்சி நடத்தப்படும். இதில் நிறைய பேர் கலந்து கொள்வர். இந்நிலையில் நேற்று முன்தினம் 'சீக்ரெட் சான்ட்' என்ற பெயரில், ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றதால், பார்க்கிற்கு வந்தவர்கள் அசவுகரியமாக இருப்பதை உணர்ந்தனர். இதுகுறித்து சிலர் தோட்டக் கலைத் துறை கவனத்திற்கும் கொண்டு சென்றனர்.
இதையடுத்து கப்பன் பார்க்கில் 20 பேருக்கு மேல் இணைந்து, ஏதாவது நிகழ்ச்சி நடத்தினால், அதுபற்றி முன்கூட்டியே தகவல் தெரிவித்து எங்களிடம் அல்லது போலீசிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று, தோட்டக் கலைத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

