குழந்தை கடத்தப்பட்டால் மருத்துவமனை லைசென்ஸ் சஸ்பெண்ட்: உச்சநீதிமன்றம்
குழந்தை கடத்தப்பட்டால் மருத்துவமனை லைசென்ஸ் சஸ்பெண்ட்: உச்சநீதிமன்றம்
ADDED : ஏப் 15, 2025 03:03 PM

புதுடில்லி: '' மருத்துவமனையில் இருந்து குழந்தை கடத்தப்பட்டால், அந்த மருத்துவமனையின் லைசென்சை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்,'' என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உ.பி.,யில் பிறந்த பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று கடத்தப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். ஆனால், அவருக்கு அலகாபாத் ஐகோர்ட் ஜாமின் வழங்கியது. அதன் பிறகு குற்றவாளி தலைமறைவாகிவிட்டார்.
இந்நிலையில் ஜாமின் வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜேபி பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் அமர்வு பிறப்பித்த உத்தரவு: நாடு முழுதும், குழந்தை கடத்தல் தொடர்பாக பதிவான வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து அனைத்து உயர்நீதிமன்றங்களும் ஆய்வு செய்ய வேண்டும். தொடர்ந்து இந்த வழக்கை தினமும் விசாரித்து ஆறு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும்.
மருத்துவமனையில் இருந்து எந்த குழந்தையாவது கடத்தப்பட்டால், முதலில் அந்த மருத்துவமனையின் லைசென்சை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும். ஒரு பெண் குழந்தை பெற்றெடுத்த பின்னர், அந்த குழந்தை காணாமல் போனாலும், மருத்துவமனையின் லைசென்சை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.
இந்த உத்தரவை அலட்சியம் செய்தால், அதனை தீவிரமாக எடுத்துக் கொண்டு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.
மேலும், குற்றவாளிக்கு ஜாமின் அளித்த அலகாபாத் உயர்நீதிமன்றத்தை நீதிபதிகள் விமர்சித்ததுடன், மேல்முறையீடு செய்யாதது ஏன் என உ.பி., அரசுக்கு கேள்வி எழுப்பினர்.