அசைவ பிரியாணி தந்த ஹோட்டல் அதிபர் கொலை: குற்றவாளி சுட்டு பிடிப்பு
அசைவ பிரியாணி தந்த ஹோட்டல் அதிபர் கொலை: குற்றவாளி சுட்டு பிடிப்பு
ADDED : அக் 21, 2025 07:15 AM

ராஞ்சி: ஜார்க்கண்டில், சைவ பிரியாணிக்கு பதில் அசைவ பிரியாணி தந்த ஹோட்டல் உரிமையாளரை கொன்று விட்டு தப்பிய முக்கிய குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில், காங்கே - பிதோரியா சாலையில் ஹோட்டல் ஒன்று உள்ளது. இங்கு, 18ம் தேதி இரவு வாலிபர் ஒருவர் வந்தார்.
தனக்கு சைவ பிரியாணி வேண்டும் எனக்கூறி வாங்கி சென்றார். வீட்டுக்குச் சென்று பார்த்ததில், அவர் அதிர்ச்சி அடைந்தார். சைவ பிரியாணிக்கு பதில், அவருக்கு அசைவ பிரியாணி வழங்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, தன் நண்பர்களுடன் ஹோட்டலுக்கு சென்று அங்கிருந்த உரிமையாளர் விஜய்குமார், 47, உடன் தகராறில் ஈடுபட்டார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், பிரியாணி வாங்கிச்சென்ற நபருடன் சென்ற மற்றொரு நபர், தன் பையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து விஜய்குமாரை சரமாரியாக சுட்டார்.
இதில், மார்பில் காயம் அடைந்த விஜய்குமாரை, அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஹோட்டல் ஊழியர்கள் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், முக்கிய குற்றவாளியான அபிஷேக் சிங், தன் குடும்பத்தினருடன் ராஞ்சியில் இருந்து தப்ப முயல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கான்கே போலீஸ் ஸ்டேஷன் எல்லைப் பகுதியில் பதுங்கியிருந்த அவரை, நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது, போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு அவர் தப்பியோட முயன்றார்.
இதையடுத்து, அவரின் இரண்டு கால்களிலும் போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். காயமடைந்த அபிஷேக்கையும், அவருக்கு ஆயுதம் வழங்கிய ஹரேந்திர சிங் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கி, கார் மற்றும் மேலும் பல ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.